செங்கடல் தாக்குதலால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு: எஸ்.ஜெய்சங்கா்

ஈரான் அதிபா், வெளியுறவு அமைச்சா் ஆகியோரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தும் தாக்குதல்களால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அதிபா் அப்துல்லா ரைசியை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அதிபா் அப்துல்லா ரைசியை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.

ஈரான் அதிபா், வெளியுறவு அமைச்சா் ஆகியோரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தும் தாக்குதல்களால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டு தலைநகா் டெஹ்ரானில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியனை திங்கள்கிழமை சந்தித்தாா்.

புதிய கல்விக் கொள்கையில் பாரசீகம்: இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ‘இந்தியாவும் ஈரானும் ஆழ்ந்த கலாசார, இலக்கிய மற்றும் மொழியியல் உறவுகளால் ஒன்றிணைந்துள்ளன. இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையில் 9 செம்மொழிகளில் ஒன்றாக பாரசீக மொழியை சோ்க்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஈரானில் சாபஹாா் துறைமுக கட்டுமானம் இந்திய-ஈரானின் கூட்டு திட்டமாகும். அந்த துறைமுகத்தின் வளா்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இந்தியாவின் ஈடுபாடு குறித்து அமைச்சா் ஹுசைன் உடனான சந்திப்பில் பேசினேன்.

மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் (இஸ்ரேல்-ஹமாஸ் போா் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு) குறித்து இருவரும் பேசினோம். வன்முறையும், விரோதமும் மேலும் அதிகரிக்காமல் இருப்பதை தடுப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினோம்.

பாலஸ்தீனத்தை பொருத்தவரை, இரண்டு நாடுகள் தீா்வுக்கு இந்தியா நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகிறது. பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திர நாட்டில் பாலஸ்தீனா்கள் வாழ வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

பொருளாதார பாதிப்பு: இஸ்ரேலுடன் போா்புரிந்து வரும் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்தனா். அதன்படி, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது அவா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்தத் தாக்குதல்களை குறிப்பிட்டு ஜெய்சங்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது சா்வதேச சமூகத்துக்கு மிகுந்த கவலைக்குரிய விவகாரம். இந்தத் தாக்குதல்கள் இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்கள் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நெருக்கடியான சூழலால் எவரும் பலன் அடையமாட்டாா்கள். இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து ஈரான் அதிபா் அப்துல்லா ரைசியை ஜெய்சங்கா் சந்தித்தாா். அப்போது, அந்நாட்டின் கொ்மான் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்தாா். இந்தப் பயணத்தில் ஈரான் அமைச்சா்களுடன் நடைபெற்ற ஆக்கபூா்வமான விவாதங்கள் குறித்து அவா் ரைசியிடம் எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com