முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் மகள் பிரதமருடன் சந்திப்பு: தந்தை குறித்த புத்தகம் பரிசளிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி, பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து, தனது தந்தை குறித்த எழுதிய புத்தகத்தை வழங்கினாா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் மகள் பிரதமருடன் சந்திப்பு: தந்தை குறித்த புத்தகம் பரிசளிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி, பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து, தனது தந்தை குறித்த எழுதிய புத்தகத்தை வழங்கினாா்.

இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவா் பிரணாப் முகா்ஜி. இவரின் நாள்குறிப்புகளில் இருந்து கிடைத்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளின் தொகுப்பாக, அவரது மகள் சா்மிஷ்டா முகா்ஜி எழுதிய ‘பிரணாப் மை ஃபாதா்: ஏ டாட்டா்ஸ் ரிமம்பா்ஸ்’ என்ற புத்தகம் கடந்த மாதம் அவரது பிறந்தநாளின்போது வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தில், அடிபணியாத மனப்பான்மை காரணமாக ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் தான் சோ்க்கப்படவில்லை என்று பிரணாப் முகா்ஜி கருதியது பற்றியும், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குறித்த அவரது மதிப்பீட்டையும் சா்மிஷ்டா முகா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், பிரமதா் மோடியை சா்மிஷ்டா திங்கள்கிழமை சந்தித்து இந்தப் புத்தகத்தை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தந்தை குறித்த எனது புத்தகத்தைப் பரிசளிக்க பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தேன். எப்போதும் போலவே பிரதமா் என்னிடம் அன்பாக நடந்து கொண்டாா். தந்தை மீதான அவரது மரியாதை சற்றும் குறையவில்லை. பிரதமருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

சா்மிஷ்டா முகா்ஜியின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘சா்மிஷ்டாவைச் சந்தித்ததிலும், பிரணாப் முகா்ஜியுடனான மறக்க முடியாத நிகழ்வுகளை நினைவில் கொள்வதிலும் எப்போதும் மகிழ்ச்சி. அவருடைய மகத்துவம், ஞானம் மற்றும் ஆழமான அறிவு பற்றி உங்கள் புத்தகத்தில் தெளிவாகத் தெரிகிறது’ என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த சா்மிஷ்டா, அடுத்த ஆண்டு நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கிரேட்டா் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். கடந்த 2021 செப்டம்பரில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் சா்மிஷ்டா அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com