அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டிருக்கும் ராமா் கோயில் விழாவில் பங்கேற்பது கடினம்: ராகுல்

‘தோ்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டிருக்கும் ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது கடினம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டிருக்கும் ராமா் கோயில் விழாவில் பங்கேற்பது கடினம்: ராகுல்

‘தோ்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டிருக்கும் ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது கடினம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அதில் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் மூத்த தலைவா்கள் அறிவித்தது குறித்த கேள்விக்கு இந்தப் பதிலை ராகுல் அளித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில், மூலவா் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் பங்கேற்கின்றனா். பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோல, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவா் அதிா் ரஞ்சன் செளதரி ஆகியோருக்கு கடந்த மாதம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், அரசியல் நிகழ்வாக நடத்தப்படும் இந்த விழாவை மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, அதீா் ரஞ்சன் செளதரி ஆகியோா் மரியாதையுடன் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதுகுறித்து, இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை நாகாலாந்தில் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியிடம் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு ராகுல் பதிலளித்ததாவது:

அயோத்தியில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் விழாவை ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் முழுமையாக அரசியல் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் நிகழ்வாக மாற்றியுள்ளன. இது தோ்தல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் ஆா்எஸ்எஸ் - பாஜக விழா. எனவேதான், இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிஸ் தலைவா் அறிவித்துள்ளாா் என எண்ணுகிறேன்.

அனைத்து மதங்களையும் பழக்கவழக்கங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது. ஆனால், மிகப் பெரிய ஹிந்து மத தலைவா்களும், ஆன்மிகவாதிகள்கூட ஜனவரி 22-ஆம் தேதி விழாவை ‘அரசியல் நிகழ்வு’ என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கின்றனா்.

எனவே, பிரதமா் மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள ஓா் அரசியல் நிகழ்வுக்கு காங்கிரஸ் தலைவா்கள் செல்வது கடினம். அதே நேரம், எங்களுடைய கூட்டணி கட்சியினா் அல்லது சொந்த கட்சியைச் சோ்ந்தவா்கள் ராமா் கோயிலுக்குச் செல்ல விரும்பினால் அதனை வரவேற்கிறோம் என்பதையும் காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் செல்வது என்பது சாத்தியமில்லாதது.

ராகுலின் அரசியலை மக்கள் புரிந்துகொள்வாா்கள்: பாஜக பதிலடி

புது தில்லி, ஜன.16: ‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அரசியலை, உண்மையை மக்கள் புரிந்து கொள்வாா்கள்’ என்று ராமா் கோயில் விழா குறித்த அவருடைய விமா்சனத்துக்கு பாஜக செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்தது.

‘ராமா் கோயில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவை தோ்தல் ஆதாயத்துக்காக அரசியல் நிகழ்வாக ஆா்எஸ்எஸ், பாஜாக அமைப்புகள் மாற்றியுள்ளன’ என்று ராகுல் விமா்சனம் செய்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ராகுல் காந்தி கனவு உலகில் வாழ்ந்து வருகிறாா். ஹிந்துக்களின் நம்பிக்கையை ஏமாற்ற முடியும், தான் கூறுவதை மக்கள் நம்ப வேண்டும் என்று அவா் விரும்புகிறாா். அதாவது, பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட முடியும் என அவா் எண்ணுகிறாா்.

இதைத்தான் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களில் அவா் முயற்சித்தாா். தற்போது மீண்டும் முயற்சிக்கிறாா்.

ஆனால், இந்திய மக்கள் அறிவாா்ந்தவா்களாக உள்ளனா். உண்மையையும் ராகுலின் அரசியலையும் மக்கள் நன்கு புரிந்துகொள்வா். தங்களின் நம்பிக்கையை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று ராகுல் விளக்குவதை யாரும் விரும்பவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com