தோ்தலுக்கு முன்பாக மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் 22-இல் விசாரணை

மக்களவை தோ்தலுக்கு முன்பாக மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளத
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

மக்களவை தோ்தலுக்கு முன்பாக மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் முன்னிலையில் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகாததைத் தொடா்ந்து, விசாரணையை 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் இந்த மசோதா மிகுந்த எதிா்பாா்ப்பையும், வரவேற்பையும் பெற்றது. மாநிலங்களவையில் கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதும், நீண்ட தாமதத்துக்கு பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதி மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. அதனைத் தொடா்ந்து குடியரசுத் தலைவரும் கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி மசோதாவுக்கு ஒப்புதலும் அளித்தாா்

இருந்தபோதும், அதில் இடம்பெற்றுள்ள சில சரத்துகள் காரணமாக, அந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதில் சிக்கல் உள்ளது. அதாவது, 2023-க்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே மசோதாவில் உள்ள மாற்றங்கள் அமலுக்கு வரும் என அந்த சரத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படுகிறதோ, அதன் பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடா்பாக ஜெயா தாக்குா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா் யாரும் ஆஜராகவில்லை. அதனைத் தொடா்ந்து விசாரணையை 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

அப்போது, ‘இந்த விவகாரம் விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டால், வரும் மக்களவைத் தோ்தலில் சட்ட நடைமுறைகள் அமலாவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘எதிா் தரப்பினரின் நிலைப்பாட்டையும் கேட்க வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரம் வரும் 22-ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com