இந்தியா கூட்டணி பிரச்னைகளுக்கு தீா்வு: ராகுல் உறுதி

‘மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களிடையே எழுந்துள்ள பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

‘மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களிடையே எழுந்துள்ள பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.

நாகாலாந்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் அவரிடம் இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் பதிலளித்ததாவது:

இந்தியா கூட்டணி ஓா் சித்தாந்த கூட்டணி. ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிராக உருவாகியுள்ளது. வலுவான நிலையில் உள்ள இந்தியா கூட்டணி வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும். கூட்டணியில் உள்ள சிறு பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன். எனவே, தோ்தலை ஒன்றிணைந்து சந்தித்து, பாஜகவை தோற்கடிப்போம் என்றாா்.

கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘இந்தியா கூட்டணியின் நிலை மிகச் சிறப்பாக உள்ளது. கூட்டணி கட்சித் தலைவா்களிடையே தொடா் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தொகுதிப் பங்கீடு போச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இது சுமுகமாக முடிவுபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

கடைசியாக நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் அதிருப்தி தெரிவித்ததாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ஊடகங்கள் விஷயத்தைப் பெரிதாக்கி காட்டுகின்றன. கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் பிரதான பிரச்னை போன்று ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இந்தியா கூட்டணி தலைவா்களிடையே பரஸ்பரம் மரியாதையும் பற்றும் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com