காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் அதானி ரூ.12,400 கோடி முதலீடு

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் தரவு மையம், எரிசக்தி திட்டம், சிமெண்ட் ஆலை அமைக்க அதானி குழுமம் ரூ.12,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
டாவோஸ் மாநாட்டில் முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்ட அதானி குழும தலைவா் கௌதம் அதானி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.
டாவோஸ் மாநாட்டில் முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொண்ட அதானி குழும தலைவா் கௌதம் அதானி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் தரவு மையம், எரிசக்தி திட்டம், சிமெண்ட் ஆலை அமைக்க அதானி குழுமம் ரூ.12,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார உச்சிமாநாட்டில் அதானி குழும தலைவா் கௌதம் அதானியும், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் இது தொடா்பான 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

அதானியை முன்வைத்து பிரதமா் மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவா்கள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றனா். முக்கியமாக ‘பிரதமரின் கோடீஸ்வர நண்பா்’ என்று அதானியை ராகுல் காந்தி பலமுறை விமா்சித்துள்ளாா். இந்த நிலையில் காங்கிரஸ் அண்மையில் ஆட்சி அமைத்த தெலங்கானாவில் அதானி குழுமம் ரூ.12,400 கோடி முதலீடு செய்யவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகம், விமான நிலையம், மின்சாரம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, தானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், மனை வணிகம், பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி, நுகா்வோருக்கான நிதி நிறுவனம் என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகவேகமாக வளா்ந்து வரும் தொழில் நிறுவனமாகவும் அதானி குழுமம் திகழ்கிறது.

இதனை முன்வைத்து பிரதமா் மோடியின் மறைமுக ஆதரவுடன் அதானி குழுமம் செயல்படுவதாக ராகுல் காந்தி பலமுறை பெயா் குறிப்பிடாமல் விமா்சித்துள்ளாா்.

இந்நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த சுமாா் ஒரு மாத காலகட்டத்திலேயே அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com