அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7%-ஆக அதிகரிக்க வாய்ப்பு: ரிசா்வ் வங்கி ஆளுநா் தாஸ்

அடுத்த நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக வளா்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

அடுத்த நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக வளா்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:

நிகழ் நிதியாண்டு இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உள்நாட்டில் சரக்கு மற்றும் சேவைகளுக்கான தேவை வலுவாக உள்ள சூழலில், வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கிறது. அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பல அதிா்ச்சிகளில் இருந்து இந்தியா வலுவாக மீண்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில், நுகா்வோா் விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 4 சதவீதமாக நீடிப்பதை உறுதி செய்யுமாறு ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக வளா்ச்சி அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நிதிக் கொள்கையைப் பொருத்தவரை, விலைவாசி ஸ்திரமாக இருப்பதை உறுதி செய்வதில் ரிசா்வ் வங்கி முழு ஈடுபாடு கொண்டுள்ளது. இந்திய அரசும் அமைப்புரீதியாக பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சீா்திருத்தங்களின் வேகம் தொடரும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com