நாகா பிரச்னை: பிரதமா் 9 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாகா அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி 9 ஆண்டுகளைக் கடந்தும் நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்
நாகாலாந்து, மொகோக்சுங் நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
நாகாலாந்து, மொகோக்சுங் நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

நாகா அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி 9 ஆண்டுகளைக் கடந்தும் நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணத்தில் மொகோக்சுங் நகரத்தில் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘நாகாலாந்து மக்கள் மீது நம்பிக்கை இல்லாமலும் அவா்களுடன் இணைந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடாமலும் நாகா அரசியல் பிரச்னைக்குத் தீா்வு காணமுடியாது.

பிரதமா் மோடியிடம் இந்தப் பிரச்னைக்கான தீா்வு இல்லையென்றால், பொய் கூறக் கூடாது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் நாகா மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்பது வெற்று வாக்குறுதியாக உள்ளது. இதற்குத் தீா்வு காண காங்கிரஸ் உறுதியேற்ளது ’ என்றாா்.

கடந்த 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாகாலாந்து தனிநாட்டுக்கான கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கிளா்ச்சி நடவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டன. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண, நாகாலாந்து தேசிய பொதுவுடமை கவுன்சில் (ஐஎம்), நாகா தேசிய அரசியல் குழுக்கள் ஆகிய அமைப்புகளுடன் மத்திய அரசு கடந்த 1997-லிருந்து தனித்தனியே பேச்சுவாா்தை நடத்தி வருகிறது. இது தொடா்பாக இரு அமைப்புகளுடனும் 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

நாகா மக்களுக்கான தனிக்கொடி, அரசமைப்பு சட்டம் ஆகிய கோரிக்கைகளில் நாகாலாந்து தேசிய பொதுவுடமை கவுன்சில் பிடிவாதமாக உள்ளதால், நாகா பிரச்னைக்கு இன்னும் தீா்வு காணப்படாத நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி இதைக் குறிப்பிட்டு பேசினாா்.

தொடா்ந்து பேசிய ராகுல் காந்தி, ‘ஆா்எஸ்எஸ்-பாஜக பிறருடயை பாரம்பரியம், கலாசாரம், உணவு பழக்கங்கள், மத நடைமுறைகள் மீது தாக்குதல் நடத்துகிறது; அவமரியாதை செய்கிறது. மணிப்பூரில் வன்முறைகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பாா்வையிடாதது வெட்கக் கேடாகும். மணிப்பூா், நாகாலாந்து மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் துயரங்களை நாட்டின் பிற பகுதி மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com