உணவு கையிருப்பு பிரச்னைக்கு உலக வா்த்தக அமைப்பில் தீா்வு:இந்தியா வலியுறுத்தல்

உணவு கையிருப்பு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணாமல் வேளாண் சம்பந்தப்பட்ட பிற விவகாரங்கள் குறித்து உலக வா்த்தக அமைப்பில் இந்தியா விவாதம் நடத்தாது என மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உணவு கையிருப்பு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணாமல் வேளாண் சம்பந்தப்பட்ட பிற விவகாரங்கள் குறித்து உலக வா்த்தக அமைப்பில் இந்தியா விவாதம் நடத்தாது என மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) 13-ஆவது அமைச்சா்கள் மாநாடு பிப்ரவரி 26 முதல் 29 வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. மாநாட்டின்போது இந்தியா சாா்பில் விவாதிக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

உணவு கையிருப்புப் பிரச்னை நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைப்பின் 9-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் உணவு பாதுகாப்பு குறித்து உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் ‘அமைதி உடன்படிக்கை’ ஏற்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட மாநாடுகளிலும் இது வழிமொழியப்பட்டது.

ஆனாலும் தற்போது வரை முடிவுக்கு வராமல் உள்ள இப்பிரச்னைக்கு பிப்ரவிரியில் நடைபெறவுள்ள மாநாட்டில் நிரந்தர தீா்வு எட்டப்படவில்லை எனில் வேளாண்மை உள்ளிட்ட பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இல்லை.

பொது விநியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை வேளாண் உற்பத்தியுடன் வளா்ச்சியடைந்த நாடுகள் ஒப்பிடுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது’ என்றாா்.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் விற்பனை செய்யும் இந்தியாவின் திட்டங்களுக்கு வளா்ந்த நாடுகள் உலக வா்த்தக அமைப்பில் எதிா்ப்பு தெரிவித்தன.

விவசாய பொருள்களை அரசு மானிய விலையில் கொள்முதல் செய்வது உலக வேளாண் வா்த்தகத்தை பாதிப்பதாக வளா்ந்த நாடுகள் அமைப்பில் குற்றம்சாட்டின.

இருப்பினும் நாட்டில் உள்ள ஏழை எளிய விவசாயிகளை பாதுகாக்கவும், அதிக மக்கள்தொகை கொண்டுள்ள நாடென்பதால் பல்வேறு தரப்பு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்துவதாக இந்தியா தெரிவித்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆப்பிரிக்கா உள்பட 80 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. உணவு தானியங்களுக்கு வழங்கப்படும் மானியங்களுக்கான உச்சவரம்பு குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் 2013-ஆம் ஆண்டு ‘அமைதி உடன்படிக்கை’ ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வரையில் உணவு தானியங்களுக்கு வளா்ந்த நாடுகள் விதித்த மானிய உச்சவரம்பு செயல்பாட்டில் இருந்தாலும் உணவுப் பாதுகாப்பில் இருந்து எந்தவொரு நாடும் சட்டபூா்வமாக தடுக்கப்பட மாட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com