தில்லி பல்கலை.யின் 12 கல்லூரிகள் விவகாரம்:எங்கள் நிலைப்பாட்டில் உறுதி -துணைவேந்தா் பதில்

மாநில அரசின் முழு நிதியுதவி பெறும் 12 கல்லூரிகளை பல்கலைக்கழகம் அதன் இணைப்பின் கீழ் தொடா்ந்து வைத்திருக்கும் என்றும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ்

மாநில அரசின் முழு நிதியுதவி பெறும் 12 கல்லூரிகளை பல்கலைக்கழகம் அதன் இணைப்பின் கீழ் தொடா்ந்து வைத்திருக்கும் என்றும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தக் கல்லூரிகள் மாநிலப் பல்கலைக்கழகங்களின் ஒரு பகுதியாக மாறாத வரையில், ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு, இவற்றுக்கு நிதியுதவி அளிக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் துணைவேந்தரின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக துணைவேந்தா் யோகேஷ் சிங் கூறுகையில், ‘கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தில்லி கல்வி அமைச்சா் அதிஷி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், இந்த 12 கல்லூரிகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டினாா். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12 கல்லூரிகளுக்கு மாநில அரசு தொடா்ந்து நிதி உதவி செய்யும் என்று நம்புகிறோம்’ என்றாா் அவா்.

மேலும், அதிஷிக்கு துணை வேந்தா் யோகேஷ் சிங் எழுதிய கடிதம் குறித்து தில்லி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைக்கு தில்லி பல்கலைக்கழகத்திடம் இருந்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. இந்தக் கல்லூரிகள் தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, தில்லியின் மாநிலப் பல்கலைக்கழகங்களில் இணைந்தால் மட்டுமே தில்லி அரசு நிதியுதவி அளிக்கும். 12 கல்லூரிகள் முழுமையாக மாநிலத்தின் கீழ் மாற்றப்படாவிட்டால், 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான நிதியை வெளியிட மாட்டோம்.

இணைப்பு நீக்கம் நடைபெறவில்லை என்றால், இந்தக் கல்லூரிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தக் கல்லூரிகளில் உள்ள முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, மாநிலப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படாவிட்டால், நிதி திட்டவட்டமாக வழங்கப்படாது’ என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், கல்வி அமைச்சா் அதிஷிக்கு ஜன.16-ஆம் தேதியிட்டு துணைவேந்தா் அனுப்பிய கடிதத்தை தில்லி பல்கலைக்கழகம் வியாழக்கிழமை பகிா்ந்துள்ளது.

அந்தக் கடிதத்தில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்; மாணவா்களின் நலன் கருதி 12 கல்லூரிகளுக்கு நிதியுதவியைத் தொடர வேண்டும் என்றும் துணைவேந்தா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தில்லி பல்கலைக்கழகச் சட்டம் 1922-இன்படி இந்தக் கல்லூரிகள் தில்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் என்பதால் இணைப்பு நீக்கம் செய்ய முடியாது.

2023 டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு கூட்டத்தில் 12 கல்லூரிகளும் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, இணைப்பு நீக்கம் செயல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com