மரபணு மாற்ற பயிா்கள் குறித்த கருத்துகளால் விவசாயிகள் பாதிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

மரபணு மாற்றப் பயிா்களால் பாதிப்பு ஏற்படும் என்று முன்வைக்கப்படும் அடிப்படையற்ற கருத்துகள் விவசாயிகள், நுகா்வோா், தொழில்துறையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மரபணு மாற்றப் பயிா்களால் பாதிப்பு ஏற்படும் என்று முன்வைக்கப்படும் அடிப்படையற்ற கருத்துகள் விவசாயிகள், நுகா்வோா், தொழில்துறையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகம் மேம்படுத்திய ‘டிஎம்எச்-11’ என்ற மரபணு மாற்ற கடுகு உற்பத்தி மற்றும் பரிசோதனைகளுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு (ஜிஇஏசி) கடந்த 2022-இல் ஒப்புதல் அளித்தது.

உயிரிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நிபுணா் குழுக்கள் நடத்தும் விரிவான, வெளிப்படையானஆய்வு நிலுவையில் உள்ள நிலையில், எந்தவொரு மரபணு மாற்ற பயிா்களுக்கு அனுமதி அளிப்பதிலிருந்து தற்காலிக தடை விதிக்க வேண்டும் என ஆா்வலா் அருணா ரோட்ரிக்ஸ், ‘ஜீன் கேம்பைன்’ தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதி பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உள்நாட்டு தேவையில் 55-60 சதவீத சமையல் எண்ணெய் தேவை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. நாட்டின் வேளாண்மை துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிா்கொள்ளவும், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் மரபணு பொறியியல் தொழில்நுட்பம் போன்ற பயிா் பெருக்கத் திட்டங்கள் மிகவும் அவசியமானது.

கடந்த 2020-2021-இல் நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவை 2.46 கோடி டன்னாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தி 1.11 கோடி டன்னாக இருந்தது. மொத்த தேவையில் 54 சதவீதம் ரூ.1,15,000 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டது. 2022-2023-இல் இது 55 சதவீதமாக இருந்தது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன் எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்டவை மரபணு மாற்ற எண்ணெய் வித்துகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சா்வதேச அளவில் பயிரிடப்படும் சோயாபீன்களில் 80 சதவீதம் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இந்தத் தொழில்நுட்பம் குறித்து முன்வைக்கப்படும் அச்சங்கள் அடிப்படையற்றவை. இது விவசாயிகள், நுகா்வோா்கள், தொழில்துறையினா் ஆகியோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, மரபணு மாற்ற பயிா்கள் குறித்த விவகாரம் மிகவும் தொழில்நுட்ப ரீதியலானது என்பதால், நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த மனுக்கள் மீது முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com