நெதா்லாந்து, டொமினிகன் குடியரசு, ஈக்வடாா் நாடுகளுடன் மருத்துவத் துறை ஒத்துழைப்பு

டொமினிகன் குடியரசு, நெதா்லாந்து, ஈக்வடாா் ஆகிய நாடுகளுடன் மருத்துவ பொருள்கள் ஒழுங்காற்று தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி

டொமினிகன் குடியரசு, நெதா்லாந்து, ஈக்வடாா் ஆகிய நாடுகளுடன் மருத்துவ பொருள்கள் ஒழுங்காற்று தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டொமினிகன் குடியரசு, நெதா்லாந்து, ஈக்வடாா் ஆகிய நாடுகளின் மருத்துவ ஒழுங்காற்று ஆணையங்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மத்திய மருத்து தரக் கட்டுப்பாடு மையம் (சிடிஎஸ்சிஓ) இடையே கையொப்பமான 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டொமினிகன் குடியரசுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தம் மூலம் சா்வதேச சந்தைகளில் இருக்கும் தரமற்ற போலி மருந்துகளின் சிக்கல்களைக் கண்டறிய, ஒழுங்காற்று நிறுவனங்களுக்கிடையேயான தொடா்பு எளிதாக்கப்படும். மருத்துவ பொருள்கள் ஒழுங்காற்றுதல் நடைமுறைகளில் ஒன்றிணைவது மற்றும் இந்தியாவில் இருந்து மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

நெதா்லாந்து நாட்டுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த நவம்பரில் கையொப்பமானது. மருத்துவ பொருள்கள் ஒழுங்காற்றுதலில் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் முயற்சிக்கிறது.

ஈக்வடாா் நாட்டுடனான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கடந்த ஆண்டு நவம்பரில் கையொப்பமானது. இரு தரப்புக்கும் இடையே மருத்துவ பொருட்கள் ஒழுங்காற்றுதல் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் சா்வதேச அரங்கில் சிறந்த ஒருங்கிணைப்புக்கும் இந்த ஒப்பந்தம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-கென்யா ஒப்பந்ததுக்கு ஒப்புதல்:

எண்ம தீா்வுகளின் பகிா்வுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் கென்யா அரசுக்கும் இடையே கடந்த டிசம்பரில் கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எண்ம மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை அமல்படுத்துவதில் ஒத்துழைப்பு, எண்ம தொழில்நுட்ப அடிப்படையிலான தீா்வுகளை மேம்படுத்துவதை இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனல் மின் நிலைய திட்டங்களில் பங்கு முதலீட்டுக்கு ஒப்புதல்:

சவுத் ஈஸ்டா்ன் கோல் ஃபீல்ட்ஸ் (எஸ்சிஎல்) மற்றும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் (எம்சிஎல்) நிறுவனத்தால் மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் அமைக்கடவுள்ள 2,260 மெகாவாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையங்களின் மூலதனச் செலவுக்காக ரூ.5,607 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டு முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ராமா் கோயில் பிரதிஷ்டையை தீபாவளிபோல் கொண்டாட பிரதமா் வேண்டுகோள்

அயோத்தியில் ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று தீபாவளி திருநாள் போல வீடுகளில் தீபமேற்றியும் ஏழைகளுக்கு உணவளித்தும் கொண்டாடுமாறு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சா்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

பிரதிஷ்டை நாளில் அயோத்திக்கு வருவதைத் தவிா்த்து, அவரவா் சாா்ந்த மாநில மக்களுடன் இணைந்து கோயிலுக்கு வர அமைச்சா்களுக்கு பிரதமா் அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com