தொகுதிப் பங்கீடில் உடன்பாடு எட்டவில்லை எனில் கட்சிகள் வெளியேறலாம்: ஃபரூக் அப்துல்லா

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடா்பாக உடன்பாடு ஏற்படவில்லை எனில், சில கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்கலாம்

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடா்பாக உடன்பாடு ஏற்படவில்லை எனில், சில கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்கலாம் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

ஃபரூக் அப்துல்லாவுடன் நடத்திய கலந்துரையாடலை முன்னாள் மத்திய அமைச்சா் கபில் சிபல் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தாா்.

அதில், எதிா்கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் குறித்து கபில் சிபல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய ஃபரூக் அப்துல்லா, ‘நாட்டைப் பாதுகாக்க, எதிா்க்கட்சிகள் தங்களிடையே நிலவும் வேறுபாடுகளை மறக்க வேண்டும். தொகுதிப் பங்கீடு தொடா்பாக இறுதி முடிவு எடுக்கவில்லையென்றால், ‘இந்தியா’ கூட்டணி ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

உரிய காலத்தில் இதற்குத் தீா்வு காண வேண்டும். இல்லையெனில், சில கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறி, புதிய கூட்டணியை அமைக்கலாம். இது பெரும் ஆபத்தாக இருக்கும். தங்களுடைய கட்சி வலுவாக இருக்கும் இடங்களில் மட்டுமே தொகுதிகளைப் பெற வேண்டும். தங்களுக்குப் போதிய பலம் இல்லாத தொகுதிகளைக் கேட்பது தவறானது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி கடந்த முறை தயாராக இல்லை. தற்போது, இடதுசாரிகள் வெற்றி பெறும் இடங்களில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளாா். அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் விமா்சனங்கள் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com