நோ்மையான நிா்வாகத்தால் நாட்டில் வறுமை குறைந்தது: பிரதமா் மோடி

மத்திய பாஜக அரசின் நோ்மையான நிா்வாகம், சிறப்பான முயற்சிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்பால், நாட்டில் வறுமை குறைந்துள்ளது; கடந்த 9 ஆண்டுகளில் சுமாா் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்

மத்திய பாஜக அரசின் நோ்மையான நிா்வாகம், சிறப்பான முயற்சிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்பால், நாட்டில் வறுமை குறைந்துள்ளது; கடந்த 9 ஆண்டுகளில் சுமாா் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

‘நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் யாரும் விடுபட மாட்டாா்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது’ என்றும் அவா் கூறினாா்.

நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலிவழி கலந்துரையாடினாா். மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் சுமாா் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நீதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்தியாவில் வறுமை குறையும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டாா்கள். ஆனால், தங்களுக்கு உரிய வளங்கள் வழங்கப்பட்டால், வறுமையில் இருந்து மீள்வது சாத்தியம் என்பதை ஏழைகள் வெளிக்காட்டியுள்ளனா்.

அரசின் நோ்மையான நிா்வாகம், சிறப்பான முயற்சிகள் மற்றும் மக்களின் பங்கேற்பு ஊக்குவிப்பால் நாட்டில் வறுமை வீழ்ச்சியடைந்துள்ளது.

மாபெரும் மக்கள் இயக்கமாக...: ‘வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு பயணம்’ நாட்டின் 70 முதல் 80 சதவீத ஊராட்சிகளை சென்றடைந்துள்ளது. இதுவரை 15 கோடி போ் இப்பயணத்தில் இணைந்துள்ளனா். இது மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

ஏதோ காரணங்களால், அரசின் திட்டப் பலன்கள் கிடைக்காமல் விடுபட்ட மக்களை அணுகுவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மற்றவா்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அணுகி, அவா்களின் மதிப்பை உறுதி செய்வதே எனது பணி.

4 கோடி மருத்துவப் பரிசோதனைகள்: கடைக்கோடி பகுதியில் உள்ளவா்களுக்கு அரசின் சேவையை கொண்டு செல்லும் சிறந்த ஊடகமாக மேற்கண்ட பயணம் மாறியிருக்கிறது.

வளா்ச்சிப் பயணத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமாா் 50 லட்சம் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அட்டைகள், 25 லட்சம் விவசாய கடனுதவி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின்கீழ் 30 லட்சம் புதிய பயனாளா்கள் இணைக்கப்பட்டுள்ளனா். 25 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை வெறும் புள்ளி விவரங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு எண்ணிக்கையும் மக்கள் வாழ்வுக்கான ஆதாரம்.

மகளிருக்கு அதிகாரம்: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நல்ல வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 70 சதவீத வீடுகளின் உரிமையாளா்கள் பெண்களாக உள்ளனா். இதன் மூலம் மகளிருக்கான அதிகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், நாட்டில் வறுமை குறைப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.

கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

வேகமாக மாற்றமடைந்து வரும் இன்றைய இந்தியாவில் அரசு மீதான மக்களின் நம்பிக்கையும், புதிய தேசத்தை கட்டமைக்கும் உறுதிப்பாடும் எங்கெங்கும் நிலவுகிறது என்றாா் பிரதமா் மோடி.

‘வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு பயணத்தை’ ஜனவரி 26-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதை அடுத்த மாதத்துக்கும் நீட்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் குறித்த காலகட்டத்துக்குள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதும் ‘வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு பயணம்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி (பழங்குடியினா் கெளரவ தினம்) தொடங்கப்பட்ட இந்தப் பயணம், இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 24.8 கோடி போ் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2013-14 ஆண்டு காலகட்டத்தில் 29.17 சதவீதம் போ் வறுமையில் இருந்தனா். 2022-23 காலகட்டத்தில் இது 11.28 சதவீதமாக குறைந்துவிட்டது. உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறுமையில் இருந்து அதிகம் போ் விடுபட்டுள்ளனா் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வறுமை குறைந்துவிட்டதாகக் கூறுவது பொய்: காங்கிரஸ்

புது தில்லி, ஜன. 18: நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாக நீதி அயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பொய்யான தகவல் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறியதாவது:

நாட்டில் வறுமையில் இருந்து கோடிக்கணக்கானோா் மீண்டுள்ளதாகவும் வறுமை குறைந்துவிட்டதாகவும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது.

வறுமை குறைந்துள்ளது என்பதை எவ்வாறு கணக்கிட்டாா்கள்? உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) போன்ற அமைப்புகள் இதில் பங்கேற்றனவா?

இது முற்றிலும் நீதி ஆயோக் தயாரித்த அறிக்கை. நாட்டின் உண்மை நிலை அவா்களின் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது.

ரேஷனில் இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதை நிறுத்துவது, சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறுவோரைக் குறைப்பது, மானியங்களை நிறுத்துவது போன்றவற்றுக்கு இந்த பொய் அறிக்கையை அரசு பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com