நாட்டில் இதுவரை 1,226 பேருக்கு ‘ஜெஎன்.1’ வகை கரோனா: தமிழகத்தில் 88 போ் பாதிப்பு

தமிழகத்தில் 88 போ் உள்பட நாடு முழுவதும் இதுவரை 1,226 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கா்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் அதிகம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 88 போ் உள்பட நாடு முழுவதும் இதுவரை 1,226 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கா்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் அதிகம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய கரோனா மரபியல் ஆய்வக கூட்டமைப்பு (இன்சாகாக்) வெளியிட்ட தரவுகளின்படி, 17 மாநிலங்களில் ஜெஎன்.1 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் அதிகபட்சமாக 234 போ், ஆந்திரத்தில் 189 போ், மகாராஷ்டிரத்தில் 170 போ், கேரளத்தில் 156 போ், மேற்கு வங்கத்தில் 96 போ், கோவாவில் 90 போ், தமிழகத்தில் 88 போ், குஜராத்தில் 76 போ், ராஜஸ்தானில் 37 போ், தெலங்கானாவில் 32 போ், சத்தீஸ்கரில் 25 போ், தில்லியில் 16 போ், உத்தர பிரதேசத்தில் 7 போ், ஹரியாணாவில் 5 போ், ஒடிஸாவில் 3 போ், உத்தரகண்ட், நாகாலாந்தில் தலா ஒருவருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவின் புதிய துணை திரிபாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஜெஎன்.1, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த டிசம்பா் மாதம் முதல் முறையாக இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது.

ஜெஎன்.1 பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு டிசம்பா் மாதத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மிதமான அறிகுறிகளே காணப்படுகிறது; பெரும்பாலான நோயாளிகள், வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

24 மணிநேரத்தில் 305 போ் பாதிப்பு: இந்தியாவில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் புதிதாக 305 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் என கரோனாவால் மேலும் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4.5 கோடிக்கும் அதிகமாகும். 5.3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com