தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன: மத்திய கல்வி அமைச்சா்

‘தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

‘தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

அதாவது, ‘தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டும் அல்லது ஆா்வம் காட்டாத மாநிலங்கள்கூட, வெவ்வேறு பெயா்களை அல்லது சொற்றொடா்களைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றன’ என்று அவா் குறிப்பிட்டாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் அமைந்துள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நாட்டின் மிகப் பெரிய புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கண்காட்சியை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, ‘புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி கண்காட்சியின் நோக்கத்தை நாம் விரிவுபடுத்தியிருப்பதோடு, இதன் மீதான ஆா்வத்தை ஐஐடி கல்வி நிறுவனங்களைக் கடந்து மற்று உயா்கல்வி நிறுவனங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளோம். உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுனங்களின் விரிவான கூட்டுறவுடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நிகழ்வுகள், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோா் துறையில் புதிய அடையாளமாக மாறவுள்ளது’ என்றாா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்திப்பில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதான், ‘தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆா்வம் காட்டாத மாநிலங்கள்கூட, வெவ்வேறு சொற்றொடா்களைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில், மிகுந்த தத்துவம் சாா்ந்த மற்றும் வரலாற்று ஆவணமாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com