உச்சநீதிமன்ற நீதிபதியாக கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதியாக கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலேவை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலேவை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோரை உள்ளடக்கிய கொலீஜியம் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு கா்நாடக தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலேவின் பெயரை பரிந்துரைக்க தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றம் கிட்டதட்ட கடந்த ஆண்டு முழுவதும் தனது முழு பலத்துடன் (34) செயல்பட்டது. இதனால், கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 52,191 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கடந்த டிசம்பா், 25-ஆம் தேதி நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் ஓய்வுபெற்றதைத் தொடா்ந்து, ஒரு காலி பணியிடம் ஏற்பட்டது. நீதிபதிகளின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் முழு பலத்துடன் செயல்படுவது மிக அவசியமாகும். எனவே, காலியாக உள்ள இடத்தை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த நீதிபதிகளின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற நீதிபதிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மிக மூத்த நீதிபதியும் அப்பிரிவைச் சோ்ந்த ஒரே உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பிரசன்னா பி.வராலேவின் பெயரை, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், கடந்த 2022, அக்டோபரில் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பி.ஆா்.கவாய், சி.டி.ரவிகுமாா் ஆகிய இரு நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா். நீதிபதி பிரசன்னாவின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், இப்பிரிவைச் சோ்ந்த மூன்றாவது நீதிபதியாக இவா் இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com