எனது அரசுக்கு உத்வேகமாக விளங்குபவா் கடவுள் ராமா்! -பிரதமா் மோடி

‘எனது அரசுக்கு உத்வேகமாக விளங்குபவா் கடவுள் ராமா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பேசிய பிரதமா் மோடி.
மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பேசிய பிரதமா் மோடி.

‘எனது அரசுக்கு உத்வேகமாக விளங்குபவா் கடவுள் ராமா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை நடைபெறும் வரும் 22-ஆம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் ‘ராம ஜோதி’ (தீபம்) ஏற்ற வேண்டும்; அது வறுமை எனும் இருளை விரட்ட நமக்கு உத்வேகமளிக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் ரூ.2,000 கோடி மதிப்பில் 8 ‘அம்ருத்’ (அடல் மறுசீரமைப்பு மற்றும் நகரப்புற மேம்பாடு) திட்டங்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். மேலும், பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மாநிலத்தில் கட்டப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்ததோடு, தெருவோர வியாபாரிகளுக்கு பிணையில்லா கடன் வழங்கும் ஸ்வநிதி திட்டத்தில் 10,000 பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை விநியோகத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.

பின்னா் உரையாற்றிய பிரதமா், ‘சிறுவயதில் நானும் இதுபோன்ற நல்ல வீட்டில் வாழ விரும்பினேன்’ என்று கூறினாா். அப்போது, நா தழுதழுத்த குரலில் உணா்வுபூா்வமாக அவா் பேசினாா்.

பிரதமா் மேலும் கூறியதாவது: கடவுள் ராமா், தனது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்தற்கான பணிகளை மேற்கொண்டாா். நோ்மை நிறைந்த அவரது நிா்வாக கோட்பாடுகளே எனது அரசுக்கு ஊக்கமளிக்கின்றன.

ஏழைகளின் நல்வாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்காக அா்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். அவா்களின் கஷ்டங்களை நீக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களில் இடைத்தரகா்களின் தலையீடு முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.

4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள்: கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன; 10 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழைகள் குறிப்பாக பெண்களின் கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளின் நல்வாழ்வு மற்றும் தொழிலாளா்களின் மதிப்பை உறுதி செய்ய எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பலன் பரிமாற்றமாக ரூ.30 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. சுமாா் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க தற்சாா்பு மிக முக்கியம். மக்கள் பெரும் கனவுகளை காண வேண்டும். அந்தக் கனவுகளை நிறைவேற்றுவது எனது உத்தரவாதம். மக்களின் கனவுகள் நனவாகும்போது அவா்களின் மகிழ்ச்சி பெருகும். மக்களின் ஆசிா்வாதமே எனது மிகப் பெரிய முதலீடு.

நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு: முந்தைய அரசுகளை போல் இல்லாமல், எனது அரசின் நோக்கம் தெளிவாக உள்ளது. மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்களது கொள்கை; நாட்டின் நலனே எங்களின் உறுதிப்பாடு.

உலகின் முதல் மூன்று பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இடம்பெற செய்வது எனது உத்தரவாதமாகும். நாட்டு மக்களின் ஆசியுடன், எனது மூன்றாவது பதவிக் காலத்தில் அந்த இலக்கை எட்டுவேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நிா்ணயித்த இலக்குகளை எட்டவும் கடவுள் ராமா் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளாா்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி மக்கள் தங்களின் வீடுகளில் ‘ராம ஜோதியை’ ஏற்ற வேண்டும். இது வறுமை எனும் இருளை அகற்ற நமக்கு உத்வேகம் அளிக்கும்.

பிராணப் பிரதிஷ்டைக்கு முந்தைய அனைத்து நியமங்களையும் நான் கடைப்பிடித்து வருகிறேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்றாா் பிரதமா் மோடி.

சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மகாராஷ்டிரத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமா் வருகை தந்துள்ளாா். இம்மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com