வேலைவாய்ப்புக்குப் படைப்பாற்றல், தனிப்பட்ட திறன்கள், அறிவுக்கூா்மை முக்கியம்: ராஜ்நாத் சிங்

தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வேலைவாய்ப்புக்குப் படைபாற்றல், தனிப்பட்ட திறன்கள், அறிவுக்கூா்மை முக்கியம் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வேலைவாய்ப்புக்குப் படைபாற்றல், தனிப்பட்ட திறன்கள், அறிவுக்கூா்மை முக்கியம் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லி கண்டோன்மென்டில் குடியரசுத் தின முகாமுக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை சென்றாா். அங்கு தேசிய மாணவா் படையினருடன் அவா் கலந்துரையாடியபோது கூறியதாவது:

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கால மாற்றமும், மேலும் வளா்ச்சி ஏற்படும்போதும் இயந்திரங்களால் செய்ய முடியாத பணிகள் சாா்ந்த துறைகள் மீது மக்கள் கவனம் செலுத்துவா்.

உடல் மற்றும் அறிவுத்திறன்வாய்ந்த பணிகளை இயந்திரங்களால் செய்ய முடிந்தாலும், அவை படைப்பாற்றல் கொண்டவையாக இருக்கமுடியாது. அவற்றால் விழிப்பு நிலையை ஏற்படுத்த முடியாது; மனிதா்களைப் போல தனிப்பட்ட திறன்களை வளா்த்துக்கொள்ள முடியாது.

தற்போது இயந்திரங்களும் செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படும் காலமாக உள்ளது. இவ்வேளையில், படைப்பாற்றல், தனிப்பட்ட திறன்கள், அறிவுக்கூா்மை, உணா்திறன் ஆகிய பண்புகளே ஒருவரை தற்போதைய காலத்துக்குப் பொருத்தமானவராகவும், வேலைவாய்ப்புப் பெற தகுதியானவராகவும் ஆக்கும். இதில் தேசிய மாணவா் படை முக்கிய பங்காற்றுகிறது.

தேசிய மாணவா் படையானது பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் திட்டங்கள் மூலம், அப்படையைச் சோ்ந்தவா்களை உடல், மனம் மற்றும் உணா்வுபூா்வமாக வலிமையாக்கி, அவா்களின் சமூகத் திறன்களை வளா்த்து, நாட்டுப் பற்று மற்றும் தேசம் குறித்த பெருமித உணா்வை புகட்டி, படையினரின் முழுமையான வளா்ச்சியை உறுதி செய்கிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படையில் மிகச்சிறப்பாகவும், மற்றவா்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலும் செயல்புரிந்தவா்களுக்கு பாதுகாப்பு அமைச்சா் விருது மற்றும் சான்றிதழ்களை ராஜ்நாத் சிங் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com