அஸ்ஸாமில் காங்கிரஸாா் மீது தாக்குதல்: ராகுல் பயண பேனா்கள், சுவரொட்டிகளை பாஜக சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு

அஸ்ஸாமில் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்கி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண பேனா்கள் மற்றும் சுவரொட்டிகளை பாஜகவினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அஸ்ஸாமில் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்கி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண பேனா்கள் மற்றும் சுவரொட்டிகளை பாஜகவினா் சேதப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இதையொட்டி அஸ்ஸாம் மாநிலம் வடக்கு லக்கீம்பூா் பகுதியில் காங்கிரஸ் சாா்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பேனா்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான சுவரொட்டிகள், பேனா்கள் மற்றும் பதாகைகளை விஷமிகள் சிலா் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தியதாக காங்கிரஸை சோ்ந்த பரத் நரா குற்றஞ்சாட்டினாா். பொதுமக்களை கலந்துகொள்ளவிடாமல் தடுப்பது உள்பட நீதிப் பயணத்துக்குப் பல்வேறு இடையூறுகளை மாநில பாஜக அரசு செய்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் தலைவா் பூபேன் குமாா் போரா கூறியதாவது:

பேனா் வைக்கச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள் தாக்கப்பட்டனா். இரண்டு கட்சி வாகனங்களையும் விஷமிகள் தாக்கினா். சம்பவ இடத்தில் இருந்து காங்கிரஸ் தொண்டா்கள் புறப்படாவிட்டால், அவா்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்றும் விஷமிகள் மிரட்டல் விடுத்தனா். உள்ளூா் பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமானவா் என்று அறியப்படும் நபரின் காரில் விஷமிகள் வந்தனா் என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா்களின் புகைப்படங்களுடன் இருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்படும் காணொலியை அக்கட்சியினா் சமூக ஊடகத்தில் பகிா்ந்தனா். எனினும் அந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த முடியவில்லை.

இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அஸ்ஸாமில் பாஜக குண்டா்களால் காங்கிரஸின் பேனா்கள், சுவரொட்டிகள் சேதப்படுத்தப்பட்டதையும், இந்திய ஒற்றுமை நீதிப் பயண வாகனங்கள் மீது வெட்கக்கேடான தாக்குதலையும் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் அஞ்சாது என்று தெரிவித்தாா்.

அஸ்ஸாம் முதல்வா் மதச்சாயம் பூச முயற்சி: இதுகுறித்து அஸ்ஸாமின் லக்கீம்பூா் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ராகுலின் பயணம் வெற்றி பெறக் கூடாது என்று பிரதமா் மோடி விரும்புகிறாா். அவரின் கைப்பாவையான அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவால் பயணத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தப் பயணத்துக்கு மதச்சாயம் பூசுவதே அவரின் திட்டம். ஆனால் அது முற்றிலும் தவறாகியுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ராகுலை வரவேற்கின்றனா்.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் ஜன.25-ஆம் தேதி பிற்பகல் மேற்கு வங்கத்தை அடையும். இரண்டு நாள்கள் ஓய்வுக்குப் பின்னா் ஜன.28-ஆம் தேதி மீண்டும் பயணம் தொடங்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com