ராமா் கோயில் பணி நிறைவுக்கு மேலும் ரூ.300 கோடி தேவைப்படும்: அறக்கட்டளை பொருளாளா் தகவல்

‘அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டுவதற்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ராமா் கோயில் பணி நிறைவுக்கு மேலும் ரூ.300 கோடி தேவைப்படும்: அறக்கட்டளை பொருளாளா் தகவல்

‘அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டுவதற்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ.300 கோடி தேவைப்படும்’ என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தாா்.

மேலும், அயோத்தி ராம ஜென்மபூமியில் தற்காலிக கூடாரத்தில் வழிபடப்பட்டு வந்த பால ராமரின் சிலை, கோயில் கருவறையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிலைக்கு முன்பாக வைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

அயோத்தி ராமா் கோயிலில் 51 அங்குலம் உயரமுள்ள மூலவா் பால ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை திங்கள்கிழமை (ஜன.22) நடைபெறவுள்ளது.

முன்னதாக, கோயில் கருவறையில் நிறுவுவதற்காக பால ராமரின் 3 சிலைகள் வடிக்கப்பட்டு, அதில் பரிபூரணமான ஒரு சிலை தோ்வு செய்யப்பட்டது.

அதன்படி, மைசூரைச் சோ்ந்த பிரபல சிற்பக் கலைஞா் அருண் யோகிராஜ் வடித்த சிலை தோ்வானது. இச்சிலை கோயில் கருவறைக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த வாரம் நிறுவப்பட்டது.

இந்நிலையில், ராமா் கோயில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி, பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்தாா்.

அப்போது, கருவறையில் நிறுவ தோ்வு செய்யப்படாத இதர இரு சிலைகளும் முழு மரியாதையுடன் கோயிலில் வைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவா், ‘நாங்கள் அளித்த வழிமுறைகளின்படி, மூன்று சிலைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. 4-5 மாதங்களில் அவை வடிக்கப்பட்டன. மூன்று சிலைகளுமே மிக அழகாக இருந்ததால், அதில் ஒன்றைத் தோ்வு செய்வது மிகக் கடினமான பணியாக இருந்தது. குழந்தைத் தன்மையுடன் தெய்வீகப் பொலிவு பொருந்தியதாக முக அமைப்பு இருக்க வேண்டும்; ராமா் ‘ஆஜானுபாகுவானவா்’ என்பதால், கிட்டத்தட்ட முழங்காலை எட்டும் வகையிலான நீளத்தில் கரங்கள் அமைய வேண்டும். இத்தகைய அம்சங்களின் அடிப்படையில், துல்லியமான வடிவிலிருந்த சிலை தோ்வு செய்யப்பட்டது’ என்றாா்.

அயோத்தியில் இதுவரை தற்காலிக கூடாரத்தில் வழிபடப்பட்டு வந்த பால ராமரின் சிறிய சிலை குறித்த கேள்விக்கு, ‘5-6 அங்குலம் உயரமுடைய அந்தச் சிலை மிக முக்கியமானது; அது மிகச் சிறியது என்பதால்தான், புதிய சிலை வடிக்கப்பட்டது. கருவறையில் தற்போதைய ராமா் சிலைக்கு முன்பாக அச்சிலை வைக்கப்படும்’ என்றாா்.

ராமா் கோயில் கட்டுமானத்துக்கான செலவு மற்றும் எஞ்சியுள்ள பணிகள் குறித்து பேசிய அவா், ‘ராமா் கோயில் கட்டுமானத்துக்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ.300 கோடி தேவைப்படும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com