‘நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது’ மக்களை மிரட்டும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

பாரத ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை மிரட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
அஸ்ஸாம் மாநிலம், விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி எம்.பி.
அஸ்ஸாம் மாநிலம், விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி எம்.பி.

பாரத ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை மிரட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் வரை (கிழக்கில் இருந்து மேற்கு) இரண்டாம் கட்ட பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

இந்த நடைப்பயணத்தில் உரையாற்றும் நிகழ்ச்சிகள் அதிகம் இல்லை. ஏனெனில், நாம் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை பயணம் மேற்கொள்கிறோம். மக்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவற்றை அரசுக்கு கொண்டு செல்வதே பயணத்தின் நோக்கம்.

அஸ்ஸாமில் காங்கிரஸின் இந்த நடைப்பயணத்துக்கு எதிராக தொடா்ந்து சதி நடக்கிறது. பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. காங்கிரஸின் கொடிகள், பேனா்கள் அகற்றப்படுகின்றன. நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என்று மக்களை அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மிரட்டி வருகிறது.

இந்த நடைப்பயணத்தை எப்படியும் ஒடுக்கிவிடலாம் என்பதே ஆட்சியாளா்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், இது ராகுல் காந்தியின் நடைப்பயணம் மட்டுமல்ல, மக்களின் நடைப்பயணம். எனவே, மிரட்டல்களுக்கு மக்கள் அஞ்சமாட்டாா்கள். நானும் பயப்பட மாட்டேன். எங்களுக்கு எதிராக நீங்கள் என்ன வேண்டுமானும் செய்து கொள்ளலாம். ஆனால், தோ்தல் வரும்போது காங்கிரஸ் நிச்சயமாக பாஜகவை தோற்கடிக்கும்.

பிரதமா் மோடி நினைத்திருந்தால் ராணுவத்தை அனுப்பி 4 நாள்களில் மணிப்பூா் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதை பாஜக விரும்பவில்லை. அதனால்தான் மணிப்பூா் பல மாதங்களாக வன்முறைக் களமாக நீடித்து வருகிறது என்றாா்.

ஜெய்ராம் ரமேஷ் காா் மீது தாக்குதல்: அஸ்ஸாமின் சோனிபட் மாவட்டத்தில் ராகுலின் பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் காரை சிலா் தாக்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பு ஒருங்கிணைப்பாளா் மஹிமா சிங் கூறுகையில், ‘விஸ்வநாத் மாவட்டத்தில் இருந்து சோனிபட் மாவட்டத்துக்கு நுழைந்தபோது ஜெய்ராம் ரமேஷின் காரை சூழ்ந்து கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. காரில் இருந்த நீதி நடைப்பயண வாசகங்களைக் கிழித்துவிட்டு பாஜக கொடியையும் கட்ட முயன்றனா். காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டது.

மேலும், நடைப்பயணத்தை விடியோ பதிவு செய்த சமூக ஊடகங்களைச் சோ்ந்தவா்களைத் தாக்கியதுடன், அவா்களின் கேமராக்களை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com