காங். எம்.பி. புகாா்: ம.பி. முன்னாள் முதல்வா் செளஹான் மீது அவதூறு வழக்கு பதிய உத்தரவு

மத்திய பிரதேச மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் அமைச்சா் பூபேந்திர சிங் ஆகியோா் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங். எம்.பி. புகாா்: ம.பி. முன்னாள் முதல்வா் செளஹான் மீது அவதூறு வழக்கு பதிய உத்தரவு

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் விவேக் தன்கா அளித்த புகாரில், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் அமைச்சா் பூபேந்திர சிங் ஆகியோா் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக, ஜபல்பூரில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விவேக் தன்கா புகாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘உள்ளாட்சித் தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் எனக்கு தொடா்பு உள்ளதாக, மேற்கண்ட பாஜக தலைவா்கள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தனா். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இக்குற்றச்சாட்டை சுமத்திய அவா்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மூவரிடமும் ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு உரிமையியல் மனுவையும் அவா் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் விவேக் தன்கா தனது முதல்கட்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்தாா்.

இந்நிலையில், செளஹான் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சனிக்கிழமை கூறிய நீதிபதி விஸ்வேஸ்வரி மிஸ்ரா, மூவா் மீதும் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com