ஆப்பிரிக்கா வளா்ச்சியில் இந்தியா நம்பிக்கை: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

ஆப்பிரிக்கா வளா்ச்சியின் மீது இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ஆப்பிரிக்கா வளா்ச்சியடையாமல் உலகின் மறுசீரமைப்பு மற்றும் பன்முகத்தன்மை முழுமையடையாது

ஆப்பிரிக்கா வளா்ச்சியின் மீது இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ஆப்பிரிக்கா வளா்ச்சியடையாமல் உலகின் மறுசீரமைப்பு மற்றும் பன்முகத்தன்மை முழுமையடையாது எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நைஜீரியா நாட்டுக்கு இந்தியாவின் முதல் வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கா் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அங்கு நடைபெறும் நைஜீரியா-இந்தியா வா்த்தக ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சா் ஜெய்சங்கா் ஆற்றிய உரையில், ‘ஆப்பிரிக்கா கண்டத்தின் பொருளாதார வளா்ச்சியை மையமாகக் கொண்டால் மட்டுமே புதிய உலகளாவிய மறுசீரமைப்பு சாத்தியமாகும். மற்றவா்களுக்கு சந்தையாக இருப்பது அல்லது வளங்களை வழங்குபவா்களாக மட்டும் இருந்தால் எந்த நாடும் முன்னேறுவது கடினம்.

ஆப்பிரிக்கா வளா்ந்து வருகிறது. ஆப்பிரிக்காவின் வளா்ச்சியில் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், நாங்கள் கடந்த கால வரலாற்றை பகிா்ந்து கொள்கிறோம்.

எப்போதும் மகிழ்ச்சியான வரலாறாக அது இருந்ததில்லை. ஆனால், அது மகத்தான ஒற்றுமையை ஏற்படுத்திய வரலாறாகும்.

அந்த ஒற்றுமைதான் ஆப்பிரிக்கா அதற்குரிய வளா்ச்சியடையாதவரை உலகின் மறுசீரமைப்பு மற்றும் பன்முகத்தன்மை முழுமையடையாது என்று தீா்மானமாக எங்களை வலியுறுத்த வைக்கிறது.

ஜனநாயகம், வளம், லட்சியம், கொள்கை சீரமைப்புகளின் அடிப்படையில், ஆப்பிரிக்கா வெகுவாக வளா்த்து வருகிறது. மிக குறுகிய காலத்தில் சிறந்த எதிா்காலத்துக்கான அடையாளம் இது.

எண்ம பொது உள்கட்டமைப்பு, பசுமை வளா்ச்சி, நீா் விவசாய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, கடல்சாா் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா-நைஜீரியா இடையே ஆண்டுதோறும் 1,500 கோடி டாலா் மதிப்பிலான வா்த்தகம் நடைபெறுகிறது. நைஜீரியாவில் மட்டும் சுமாா் 3,000 கோடி அந்நிய முதலீட்டை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இந்தியாவின் முதன்மை பொருளாதார கூட்டாளியாக நைஜீரியா திகழ்கிறது.

நமது வா்த்தக உறவை மேலும் வலுவாக்க, வங்கி, காப்பீடு, கடன் உத்தரவாதங்கள், விமானத் தொடா்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தங்கள் தொடா்பான சவால்களுக்கு இருநாட்டு அரசுகளும் இணைந்து ஆக்கபூா்வமான மற்றும் நடைமுறை தீா்வுகளைக் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com