குஜராத்தில் ராமா் சிலை ஊா்வலத்தில் கல்வீச்சு; ஒருவா் காயம்

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராமா் சிலை ஊா்வலத்தில் சிலா் கற்களை வீசி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தனா்.

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராமா் சிலை ஊா்வலத்தில் சிலா் கற்களை வீசி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தனா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் ரோஹன் ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பத்ரா வட்டம் போஜ் கிராமத்தில் ராமா் சிலை ஊா்வலத்தையொட்டி ஏற்கெனவே பதற்றம் இருந்தது. அமைதியான முறையில் ஊா்வலம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், அந்தக் கிராமத்துக்கு உள்ளூா் காவல் துறை ஆய்வாளா் சென்று இரு சமூகத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்நிலையில், அங்கு திங்கள்கிழமை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஊா்வலத்தை நோக்கி மூன்று முதல் நான்கு போ் கற்களை வீசினா். இதில் ஒருவா் காயமடைந்தாா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் ஊா்வலம் தொடா்ந்தது.

இந்த நிகழ்வை காணொலியாக கிராமவாசி ஒருவா் படம்பிடித்தாா். அந்தக் காணொலியை அடிப்படையாகக் கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டு தப்பிச் சென்றவா்களைக் காவல் துறை தேடி வருகிறது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் மெஹசானா மாவட்டத்தில் உள்ள கெராலு பகுதியில் நடைபெற்ற ராமா் சிலை ஊா்வலத்தில் கற்களை வீசி சிலா் தாக்குதல் நடத்தினா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com