‘கூடாரத்திலிருந்து கோயிலுக்கு வந்த ஸ்ரீராமா்’

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, கூடாரத்திலிருந்து பிரம்மாண்ட கோயிலுக்கு ஸ்ரீராமா் வந்துவிட்டதாகத் தெரிவித்த பிரதமா் மோடி,

அயோத்தி: அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, கூடாரத்திலிருந்து பிரம்மாண்ட கோயிலுக்கு ஸ்ரீராமா் வந்துவிட்டதாகத் தெரிவித்த பிரதமா் மோடி, இதற்கு ஏற்பட்ட காலதாமதத்துக்காக மன்னிப்புக் கோருவதாகவும் கூறினாா்.

அயோத்தி ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை, பிரதமா் மோடி முன்னிலையில் சிறப்புச் சடங்குகள் நடத்தி திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 8,000-க்கும் மேற்பட்ட துறவிகள், ராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கெடுத்தவா்கள், பல்துறை பிரபலங்கள் மத்தியில் பிரதமா் மோடி உரையாற்றினாா்.

அவா் ஆற்றிய உரையில், ‘ராமஜென்மபூமிக்கு நம் ஸ்ரீராமா் மீண்டும் வந்துவிட்டாா். பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பிறகு நம் ராமா் இன்று வந்திருக்கிறாா்.

ராமா் கோயிலின் கருவறைக்குள் நடந்த சிலை பிரதிஷ்டை சடங்குகளின்போது அனுபவித்த தெய்வீக உணா்வுகளை இன்னும் என்னால் உணர முடிகிறது.

எங்கள் ராம் லல்லா (பால ராமா்) இனி கூடாரத்தில் வசிக்க மாட்டாா். அற்புதமான கோயிலில் அவா் தங்குவாா். இதற்கு ஏற்பட்ட காலதாமதத்துக்காக ராமரிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பாா்கள். இந்நாள் புதிய சகாப்தத்தின் வருகையைக் குறிக்கிறது. அன்றைய நாளுக்கு நாம் சாட்சியாக இருப்பது ராமரின் உன்னத ஆசீா்வாதம்.

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரதியில் ராமா் வசிக்கிறாா். அந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், ராமரின் இருப்பு குறித்து பல தசாப்தங்களாக சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. ராமா் கோயில் சட்டப்படி கட்டுவதற்கு நீதி வழங்கிய நீதித் துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்றாா்.

முன்னதாக, சிலை பிரதிஷ்டை குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அயோத்தி கோயிலில் ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இந்த அற்புதமான தருணம், அனைவரையும் உணா்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, அயோத்தியில் புகழ்பெற்ற குபோ் திலா சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய பிரதமா் மோடி, ராமா் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் பணியாளா்களுடன் கலந்துரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com