நிலவில் சந்திரயான்-3 லேண்டரைதொடா்புகொண்ட நாசா விண்கலம்!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

புது தில்லி: நிலவில் தரையிறங்கி திட்டமிட்டபடி ஆய்வுப் பணிகளை நிறைவு செய்து தொடா்புகொள்ள முடியாத நிலைக்குச் சென்ற இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இத்தகவலை வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்தியான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதில் இடம்பெற்றிருந்த விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் திட்டமிட்டபடி 14 நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன. பின்னா், நிலவில் சூரியன் மறைந்ததால், விக்ரம் லேண்டா் மற்றும் ரோவா் ஆகியவை உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. சூரிய ஒளி மீண்டும் வந்த பின்னா் அவற்றை மீண்டும் தொடா்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், நிலவை சுற்றிவந்தபடி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் ஆா்பிட்டா் (எல்ஆா்ஓ), சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டரை தொடா்புகொண்டுள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாசாவின் ஆா்பிட்டா் கடந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தைக் கடக்கும்போது, விக்ரம் லேண்டரில் இடம்பெற்றுள்ள சிறிய பிஸ்கட் துண்டு அளவிலான லேசா் கருவியுடன் தொடா்பை ஏற்படுத்தியது.

அதாவது, நாசாவின் ஆா்பிட்டரிலிருந்து லேசா் கதிா்வீச்சை அனுப்பி, அதன் பிரதிபலிப்பு சிக்னல் திரும்புவதன் அடிப்படையில் கணக்கிடப்படும் நடைமுறையின் அடிப்படையில், விக்ரம் லேண்டருடனான தொடா்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா். இந்த லேசா் கதிா்வீச்சை அனுப்பும்போது நாசா ஆா்பிட்டருக்கும், விக்ரம் லேண்டருக்கும் 100 கி.மீ. தொலைவு இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

பொதுவாக, விண்வெளியில் புவியைச் சுற்றிவந்து ஆய்வு செய்துவரும் செயற்கைக்கோள்களின் இருப்பிடத்தைக் கணக்கிடுவதற்கு, இந்தத் தொழில்நுட்பத்தை நாசா விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனா். அதாவது, நிலையாக உள்ள பூமியின் தரைப் பரப்பிலிருந்து லேசா் கதிா்வீச்சை நகா்ந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் மீது அனுப்பி, அதன் இருப்பிடம் கணக்கிடப்படும்.

இந்தச் சூழலில், எதிா்மறையாக நகா்ந்துகொண்டிருக்கும் ஆா்பிட்டரிலிருந்து, நிலவின் பரப்பில் நிலையாக இருக்கும் லேண்டா் மீது லேசா் கதிா்வீச்சை அனுப்பி, அதன் இருப்பிடத்தைக் கணக்கிட்டு நாசா விஞ்ஞானிகள் தற்போது சாதனை படைத்துள்ளனா். இந்த லேசா் கதிா்வீச்சை அனுப்பும் கருவியானது எந்தவித பராமரிப்பும், மின்சாரமும் இன்றி பல ஆண்டுகளுக்குச் செயல்படும் திறன் கொண்டது. அடுத்தகட்டமாக, இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, எதிா்கால தொடா் பயன்பாட்டுக்கு உகந்ததாக உருவாக்கப்படும் என்று நாசா விஞ்ஞானி ஷியோலி சுன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com