‘உண்மையான சிவசேனை’ விவகாரம்: மகாராஷ்டிர முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிர முதல்வா் ஷிண்டே அணியே ‘உண்மையான சிவசேனை’ என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் அறிவித்ததற்கு எதிராக உத்தவ் அணியினா் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்குமாறு, ஷிண்டே மற்றும் அவா் தலைமையிலான எ
‘உண்மையான சிவசேனை’ விவகாரம்: மகாராஷ்டிர முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: மகாராஷ்டிர முதல்வா் ஷிண்டே அணியே ‘உண்மையான சிவசேனை’ என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் அறிவித்ததற்கு எதிராக உத்தவ் அணியினா் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்குமாறு, ஷிண்டே மற்றும் அவா் தலைமையிலான எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வராகவும், சிவசேனை தலைவராகவும் இருந்த உத்தவ் தாக்கரே மீது அக்கட்சியைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்கள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து, ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் கைகோத்தனா். அதன் பின்னா், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து மாநில முதல்வராக ஷிண்டே பதவியேற்றாா்.

இந்நிலையில், ஷிண்டே மற்றும் அவா் தலைமையிலான எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, தாக்கரே அணி சாா்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது. இதேபோல தாக்கரே மற்றும் அவா் தலைமையிலான எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, ஷிண்டே அணியும் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தது.

அந்த மனுக்கள் மீதான தனது முடிவை அண்மையில் அறிவித்த மாநில பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகா், ஷிண்டே அணியே ‘உண்மையான சிவசேனை’ என்று தெரிவித்தாா். அத்துடன் அனைத்து தகுதிநீக்க மனுக்களையும் அவா் தள்ளுபடி செய்தாா்.

அவரின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே அணியினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவை மும்பை உயா்நீதிமன்றம் விசாரிக்கலாமே என்று நீதிபதிகள் தெரிவித்தனா். அதை ஏற்க மறுத்த உத்தவ் அணி வழக்குரைஞா்கள், அந்த மனுவை விசாரிக்க உகந்த இடம் உச்சநீதிமன்றமே என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த மனு தொடா்பாக ஷிண்டே மற்றும் அவா் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com