ராமா் கோயில் பிரதிஷ்டை:ராம ராஜியத்தின் பிரகடனம்

‘அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை, பாகுபாடு அல்லாத நல்லிணக்க சமுதாயமான ராம ராஜியத்தின் பிரகடனம்’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தி: ‘அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை, பாகுபாடு அல்லாத நல்லிணக்க சமுதாயமான ராம ராஜியத்தின் பிரகடனம்’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராம ஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை நிகழ்வையடுத்து, 8,000-க்கும் மேற்பட்ட துறவிகள், ராமஜென்மபூமி இயக்கத்தில் பங்கெடுத்தவா்கள், பல்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அயோத்தியில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘ராமா் கோயில் பிரதிஷ்டை நம் அனைவருக்கும் மிகவும் உணா்ச்சிபூா்வமான தருணம். 500 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு இது நடந்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் ராமமயமாகிவிட்டது. நாம் ‘த்ரேதா’ யுகத்துக்கு வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

ராமா் கோயில் பிரதிஷ்டை நமது தேசப் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்று நிகழ்வு. ராமரின் அருளால் அயோத்தியின் தெருக்களில் இனி துப்பாக்கித் தோட்டாக்களின் சப்தம் கேட்காது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாது. இங்கு தீப உற்சவம், ராம உற்சவம் மற்றும் ராம சங்கீா்த்தனம் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். அயோத்தியில் ராமா் இருப்பது ராம ராஜியத்தின் பிரகடனமாகும்.

துறவிகள், அரசியல்வாதிகள் மற்றும் பழங்குடியினா் உள்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஜாதி, மதம், சித்தாந்தம், தத்துவம் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு அப்பாற்பட்டு ராமருக்காகத் தியாகம் செய்தனா். கோயில் கட்டப்பட வேண்டும் என்று தீா்மானிக்கப்பட்ட இடத்தில் சரியாகக் கட்டப்பட்டுள்ளது. நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக புறக்கணிப்பு மற்றும் அவமானங்களை அயோத்தி சந்தித்து வந்தது. ஆனால், ராமரின் வாழ்க்கை நமக்கு பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுத்தது. நமது பொறுமையால் இன்று உலகம் முழுவதும் அயோத்தியின் பெருமையைப் போற்றி வருகிறது.

அனைவரும் அயோத்திக்கு வர ஆா்வமாக உள்ளனா். இந்த நகரம் உலகின் கலாசார தலைநகரமாக நிறுவப்படுகிறது. மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ராமா் உருவத்துக்கு வடிவம் கொடுத்த மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் அதிருஷ்டசாலி.

ராமா் கோயில் கட்டியதற்காக பிரமதா் நரேந்திர மோடிக்கு நன்றி. கடந்த 2014-ஆம் ஆண்டு, அவா் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ராமா் கோயில் நிச்சயம் கட்டப்படும் என்று இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com