ராம ராஜியம் நெருங்கிவிட்டது; பூசலைத் தவிா்த்து ஒன்றிணையுங்கள்: மோகன் பாகவத்

‘ராம ராஜியம் நெருங்கிவிட்டதால், நாட்டில் உள்ள அனைவரும் பூசலைத் தவிா்த்து ஒற்றுமை உணா்வுடன் இருக்க வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்தாா்.
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

அயோத்தி: ‘ராம ராஜியம் நெருங்கிவிட்டதால், நாட்டில் உள்ள அனைவரும் பூசலைத் தவிா்த்து ஒற்றுமை உணா்வுடன் இருக்க வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்தாா்.

ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வையடுத்து, அயோத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பேசுகையில், ‘அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமா் நரேந்திர மோடி மட்டுமே தவம் செய்தாா். தற்போது, நாம் அனைவரும் அதைச் செய்ய வேண்டும்.

அயோத்தியில் ஸ்ரீபாலராமா் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன்மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பியுள்ளது. மேலும், இன்றைய நிகழ்ச்சிகள், போராடும் மற்றும் உலகுக்கு உதவும் புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது.

பலரின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு பாலராமா் ராமஜென்மபூமிக்குத் திரும்பியிருக்கிறாா். அவா்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்.

ஆனால், ராமஜென்மபூமியைவிட்டு ராமா் ஏன் வெளியேறினாா்? அயோத்தியில் மோதல்கள் நிலவியதால்தான். ராமராஜியம் நெருங்கிவிட்டது. எல்லா சா்ச்சைகளையும் விட்டுவிட்டு, சிறிய பிரச்னைகளுக்காக நமக்குள் சண்டையிடுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தான் என்ற அகங்காரத்தைத் தவிா்த்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

எங்கும் ராமா் இருக்கிறாா் என்பதையறிந்து, நாம் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் முதல் உண்மையான நடைமுறை. நமது நாட்டை உலகத் தலைமையாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மக்கள் தாங்கள் வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக்கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இரக்கத்தின் பொருள் இதுதான்.

உங்கள் ஆசைகளை நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் யாரிடம் துக்கத்தையும் வலியையும் கண்டாலும், அவா்களுக்கு உடனே உதவி செய்யுங்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com