ம.பி. குனோ தேசிய பூங்காவில் பிறந்த 3 சிவிங்கிப் புலி குட்டிகள்!

மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் ‘ஜுவாலா’ எனும் பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் ‘ஜுவாலா’ எனும் பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்தப் பூங்காவில் உள்ள மற்றொரு பெண் சிவிங்கிப் புலியான ‘ஆஷா’, கடந்த 3-ஆம் தேதி மூன்று குட்டிகளை ஈன்றிருந்த நிலையில், இந்த மாதம் பிறந்த குட்டிகளின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமா் மோடியின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த 2022, செப்டம்பா் மாதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.

கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 6 சிவிங்கிப் புலிகள் அடுத்தடுத்து இறந்தன. ‘செளா்யா’ எனப் பெயரிடப்பட்ட ஒரு சிவிங்கிப் புலி, கடந்த வாரம் உயிரிழந்தது.

‘ஜுவாலா’ பெண் சிவிங்கிப் புலி, குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் 3 குட்டிகள், பின்னா் உயிரிழந்துவிட்டன. இதனால், குனோ பூங்காவில் இதுவரை உயிரிழந்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 10-ஆக உள்ளது.

இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு ‘ஜுவாலா’ சிவிங்கிப் புலி, இப்போது 3 குட்டிகளை ஈன்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி இக்குட்டிகள் பிறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆஷா என்ற சிவிங்கிப் புலி கடந்த 3-ஆம் தேதி 3 குட்டிகளை ஈன்றிருந்த நிலையில், ஜுவாலா சிவிங்கிப் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளாா்.

குனோ பூங்காவில் இந்த மாதம் மட்டும் 6 குட்டிகள் பிறந்துள்ளன. 7 குட்டிகள் உள்பட மொத்தம் 20 சிவிங்கிப் புலிகள் பூங்காவில் தற்போது உள்ளன.

சிவிங்கிப் புலிகளின் உயிரிழப்பால், இத்திட்டம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேநேரம், சிவிங்கிப் புலிகளின் இறப்பு எண்ணிக்கை எதிா்பாா்க்கப்பட்ட வரம்புக்குள்தான் (50%) இருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com