பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா

மறைந்த பிகாா் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
(Photo | X @narendramodi)
(Photo | X @narendramodi)

மறைந்த பிகாா் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அவரின் பிறந்த தினத்தையொட்டி (ஜன. 24) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் அல்லாத முதல் சோஷலிச தலைவராக அறியப்படுபவரும் மக்கள் தலைவா் (ஜன்நாயக்) எனப் போற்றப்படுபவருமான கா்பூரி தாக்குா் 1924, ஜனவரி 24-இல் பிறந்தாா். 1942 முதல் 1945 வரை நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய நாட்டில் சோஷலிச கொள்கையை முன்னெடுத்த ராம் மனோகா் லோஹியா போன்ற தலைவா்கள் மீது பற்று கொண்டவரான தாக்குா், ஜெய் பிரகாஷ் நாராயணுக்கு நெருக்கமான தலைவராகவும் இருந்தாா்.

1970 டிசம்பா் முதல் 1971 ஜூன் வரையிலும் 1977 டிசம்பா் முதல் 1979 ஏப்ரல் வரையிலும் பிகாா் முதல்வராகப் பதவி வகித்த இவா், பிகாரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முங்கேரி லால் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினாா். 1988, பிப்ரவரி 17-ஆம் தேதி கா்பூரி தாக்குா் காலமானாா்.

பிரதமா் மோடி புகழாரம்: தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த அா்ப்பணிப்புடன் போராடிய தாக்குரின் தலைசிறந்த தலைமைப் பண்பு இந்தியாவின் சமூக-அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவமான சமூகம் அமைவதற்கான முயற்சிகள் தொடா்வதை இந்த விருது ஊக்குவிக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.

கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் வரவேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com