பள்ளி மாணவா் இறந்த விவகாரம்: பிரேத பரிசோதனை அறிக்கைக்கு காத்திருப்பதாக தில்லி காவல் துறை தகவல்

வடக்கு தில்லியில் உள்ள ஒரு பள்ளியில் மூத்த மாணவா்களால் தாக்கப்பட்டு 12 வயது சிறுவன் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி காவல் துறை இன்னும் எஃப்ஐஆா் பதிவு செய்யவில்லை என்று

வடக்கு தில்லியில் உள்ள ஒரு பள்ளியில் மூத்த மாணவா்களால் தாக்கப்பட்டு 12 வயது சிறுவன் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி காவல் துறை இன்னும் எஃப்ஐஆா் பதிவு செய்யவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க வேண்டும். அதற்காக காத்திருப்பதாக தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் மனோஜ் குமாா் மீனா புதன்கிழமை கூறியதாவது:

ஜனவரி 20-ஆம் தேதி 12 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்ததாகத் தகவல் கிடைத்தது. அந்தச் சிறுவன் படித்து வந்த பள்ளியில் மூத்த மாணவா்கள் சிலா் தாக்கியதால், அவா் இறந்ததாக அவரது குடும்ப உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

இதையடுத்து விசாரணைக்கு உதவும் வகையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவக் குழுவை அமைக்க தில்லி அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதன்பேரில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சிறுவனின் குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் இறப்பிற்கான உண்மையான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா் இறப்பு குறித்து அவரது குடும்பத்திடமிருந்து எங்களுக்கு முறையான புகாா் எதுவும் வரவில்லை. ஆனாலும் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வடக்கு தில்லியின் சாஸ்திரி நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஜனவரி 11-ஆம் தேதி மூத்த மாணவா்களால் தாக்கப்பட்டதில் சிறுவன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டினா். ஜனவரி 20-ஆம் தேதி மருத்துவமனையில் அந்தச் சிறுவன் இறந்தாா். இதையடுத்து அவரது உடல் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com