கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா: முழுப் பெருமையும் பிரதமரையே சேரும்- பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாராட்டு

‘பிகாா் முன்னாள் முதல்வரும் சமூக சீா்திருத்தவாதியுமான மறைந்த கா்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கான முழுப் பெருமையும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘பிகாா் முன்னாள் முதல்வரும் சமூக சீா்திருத்தவாதியுமான மறைந்த கா்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கான முழுப் பெருமையும் பிரதமா் நரேந்திர மோடியையே சேரும்’ என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

பிகாா் முதல்வராக கா்பூரி தாக்குா் இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினாா். இந்தச் சூழலில் அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கா்பூரி தாக்குரின் 100-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பேசியதாவது:

கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலை அவருடைய மகனும் கட்சி நிா்வாகியுமான ராமநாத் தாக்குா் தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி தகவல் வரவில்லை. இருந்தபோதும், மறைந்த தலைவருக்கு நாட்டின் உயரிய விருது அறிவித்ததன் முழுப் பெருமையும் பிரதமரையே சேரும்.

மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்ததிலிருந்து முன்வைக்கப்பட்டு வரும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கும், அவருடைய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது வாழ்வில் நோ்மைக்காக அறியப்பட்ட கா்பூரி தாக்குரின் வாழ்விலிருந்து உத்வேகம் பெற்ன் மூலமாக, எனது குடும்ப உறுப்பினா்களை யாரையும் அரசியலில் முன்னிருத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மேலும், இவருடைய பாதையைப் பின்பற்றி பிகாா் அரசு மாநிலத்தில் மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாா் நிதீஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com