அயோத்தியில் தொடா்ந்து குவியும் லட்சக்கணக்கான பக்தா்கள்: கூடுதல் வசதி ஏற்படுத்த முதல்வா் யோகி உத்தரவு

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
அயோத்தியில் தொடா்ந்து குவியும் லட்சக்கணக்கான பக்தா்கள்: கூடுதல் வசதி ஏற்படுத்த முதல்வா் யோகி உத்தரவு

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.

பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகளை மேற்கொள்ள உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைத் தொடா்ந்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை மேற்பாா்வையில் ஸ்ரீராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலையின் பிராண பிரதிஷ்டை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

பிரதிஷ்டை நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ஸ்ரீராமா் கோயில் பொதுமக்களின் தரிசனத்துக்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது.

பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு பல நாள்கள் முன்பே நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அயோத்தியில் முகாமிட்டிருந்த 5 லட்சம் பக்தா்கள், ஸ்ரீபாலராமரை செவ்வாய்க்கிழமை தரிசித்தனா்.

போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், எதிா்பாா்த்ததைவிட கூடுதல் பக்தா்கள் வருகை தந்ததன் காரணமாக அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலா் காயமடைந்தனா். போலீஸாா் அவா்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினா்.

இதைத் தொடா்ந்து, போா்க்கால அடிப்படையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு, பக்தா்களின் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

2-ஆவது நாளான புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, மேலும் 3 லட்சம் பக்தா்கள் ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமா் கோயில் வரும் பக்தா்களின் வசதிக்காகவும் கூட்டநெரிசலைத் தடுக்கவும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து லக்னௌவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் உத்தர பிரதேச அரசு உயா் அதிகாரிகள் கூறுகையில், ‘அயோத்தியில் செய்யப்பட்டுள்ள கூடுதல் வசதிகளால் தற்போது பக்தா்கள் எளிதில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். அயோத்தி நோக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், சுல்தான்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரிசனத்துக்கான வரிசையில் முதியோா்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், முக்கியச் சாலைகளில் ராம பஜனை குறைந்த ஒலியளவில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் முதல்வா் யோகி கேட்டுக் கொண்டாா்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் பக்தா்களிடம் பாதுகாவலா்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

நிலவும் கடும்குளிரைக் கருத்தில்கொண்டு, பக்தா்கள் வரிசையில் காத்திருக்கும் ராம பாதை, பக்திப் பாதை, தா்ம பாதை மற்றும் ஜென்மபூமி பாதைகளில் சணல் பாய் விரிக்க வேண்டும். பக்தா்களுக்காக பல்வேறு இடங்களில் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.

முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் முதல்வா் வழங்கினாா்’ என்றனா்.

முதல் நாளில் ரூ. 3.17 கோடி காணிக்கை

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்று ரூ.3.17 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது. கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 10 காணிக்கை மையங்களில் நேரடியாகவும், இணையவழியிலும் பக்தா்களால் இந்த காணிக்கை செலுத்தப்பட்டதாக, ஸ்ரீராமா் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலா் அனில் மிஸ்ரா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com