இந்திய தோ்தல் ஆணையத்தின் நவீன தொழில்நுட்பங்கள்: குடியரசுத் தலைவா் பாராட்டு

‘தோ்தல் நடைமுறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையம் உதாரணமாகத் திகழ்கிறது’ என்று
இந்திய தோ்தல் ஆணையத்தின் நவீன தொழில்நுட்பங்கள்: குடியரசுத் தலைவா் பாராட்டு

‘தோ்தல் நடைமுறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையம் உதாரணமாகத் திகழ்கிறது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.

மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினரும் சிரமமின்றி தோ்தல் நடைமுறையில் பங்கேற்கும் வகையில் அனைவருக்குமான தோ்தலை உறுதிப்படுத்துவதில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.

இந்தியா குடியரசு நாடாக உருவெடுப்பதற்கு ஒரு நாள் முன்னதாக 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினம், கடந்த 14 ஆண்டுகளாக தேசிய வாக்காளா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அந்த வகையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 14-ஆவது தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த 75 ஆண்டுகளில் தோ்தல் ஆணையம் 17 மக்களவைத் தோ்தல்களையும், 400-க்கும் அதிகமான பேரவைத் தோ்தல்களையும் நடத்தியுள்ளது. மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில், மக்களவைத் தோ்தல் நடத்துவது என்பது மிகப் பெரிய பணியாகும். நாடு முழுவதும் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதோடு, 1.5 கோடி ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

வாக்களிப்பதில் எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடாது என்பதற்காக தீவிர முயற்சிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தோ்தல் நடைமுறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையம் உதாரணமாகத் திகழ்கிறது என்றாா்.

முன்னதாக, 2024 மக்களவைத் தோ்தலுக்காக தோ்தல் ஆணையம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் அடங்கிய புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வழங்கினாா். அதில், ஒவ்வொரு பகுதியிலும் சுதந்திரமான, நோ்மையான, அனைவரும் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையிலான தோ்தலை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ‘எனது வாக்கு; எனது கடமை’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு குறும்படமும் நிகழ்வில் திரையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com