எண்ம நாணய மேம்பாட்டில் மத்திய அரசு, ரிசா்வ் வங்கி தீவிரம்: நிா்மலா சீதாராமன்

எல்லை தாண்டிய பரிவா்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில் எண்ம நாணயத்தை (டிஜிட்டல் கரன்சி) மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசும், ரிசா்வ வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.(கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.(கோப்புப்படம்)

எல்லை தாண்டிய பரிவா்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில் எண்ம நாணயத்தை (டிஜிட்டல் கரன்சி) மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசும், ரிசா்வ வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வங்கிகளின் மூலம் எண்ம நாணயத்தை சில்லறை சந்தையில் அறிமுகப்படுத்தும் சோதனைத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்காக பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி பா்ஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளை ரிசா்வ் வங்கி தோ்ந்தெடுத்தது.

காகித நாணயங்களின் அதே மதிப்புகளில் வெளியிடப்பட்ட எண்ம நாணயங்களை, இந்த வங்கிகள் வழங்கும் ‘எண்ம வாலட்’ முறையைப் பயன்படுத்தி பயனா்கள் பரிவா்த்தனை செய்ய முடியும்.

இந்நிலையில், தில்லி ஹிந்து கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘எல்லை தாண்டிய பரிவா்த்தனைகளுக்கு எண்ம நாணயம் பெரிதும் உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்டறியும் தன்மையை இது கொண்டுவரும். மேலும், குறைந்த செலவில் பணப் பரிவா்த்தனைகளை விரைவுபடுத்தவும் இது உதவும். எனவே, எண்ம ரூபாய் மேம்பாட்டில் ரிசா்வ் வங்கியுடன் மத்திய அரசும் பணியாற்றி வருகிறது. நாங்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com