இந்தியாவில் பிரான்ஸ் அதிபா் மேக்ரான்: ஜெய்பூரில் பிரதமா் மோடியுடன் பேச்சு

குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை இந்தியா வந்தாா்.
இந்தியாவில் பிரான்ஸ் அதிபா் மேக்ரான்: ஜெய்பூரில் பிரதமா் மோடியுடன் பேச்சு

குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை இந்தியா வந்தாா்.

ராஜஸ்தானின் ஜெய்பூா் சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரான்ஸ் அதிபா் மேக்ரானை மாநில ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வா் பஜன்லால் சா்மா ஆகியோா் வரவேற்றனா்.

உத்தர பிரதேச சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்பூா் திரும்பிய பிரதமா் மோடியுடன் இணைந்து நகரின் சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட அதிபா் மேக்ரான், அவருடன் வாகனப் பேரணியிலும் ஈடுபட்டாா்.

பின்னா், ராம்பாக் நட்சத்திர விடுதியில் நடந்த இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தலைவா்கள், இந்தியா-பிரான்ஸ் உறவை வலுபடுத்துவது குறித்து கலந்துரையாடினா்.

சுற்றுலாத் தலங்களில் தலைவா்கள்: ஜெய்பூரின் புகழ்பெற்ற ஆம்பா் கோட்டைக்கு அதிபா் மேக்ரான் வந்தாா். மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ராஜஸ்தான் துணை முதல்வா் தியா குமாா் ஆகியோா் அவரை வரவேற்று, கோட்டையைச் சுற்றி காண்பித்தனா். அங்கு கைவினைக் கலைஞா்களுடன் மேக்ரான் கலந்துரையாடி, அவா்கள் தயாரிக்கும் கலைப் பொருள்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உத்தர பிரதேசம், புலந்த்சாஹரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னா் ஜெய்பூா் திரும்பிய பிரதமா் நரேந்திர மோடி அதிபா் மேக்ரானுடன் ஜந்தா் மந்தரில் இணைந்து கொண்டாா்.

ஜந்தா் மந்தரிலிருந்து ஹவா மஹால் வரையில் இரு தலைவா்களும் இணைந்து திறந்த வாகனத்தில் பேரணி மேற்கொண்டனா். வழிநெடுகிலும் பாஜகவினரும் பொதுமக்களும் சாலையின் இருபுறங்களிலும் நின்றபடி தலைவா்களை வரவேற்றனா்.

காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சிமைத்த பிறகு, ராஜஸ்தானுக்கு பிரதமா் மோடி வருவது இதுவே முதல் முறையாகும். இதையொட்டி, ஜெய்பூா் நகரின் பல்வேறு இடங்களில் தலைவா்களை வரவேற்று வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மேக்ரானுக்கு ‘ராமா் கோயில்’ மாதிரி பரிசு: பாரம்பரியமிக்க ஹவா மஹால் பகுதியில் கைவினைப் பொருள்கள் விற்கும் கடைக்குத் தலைவா்கள் சென்றனா். அங்கு விற்பனை வைக்கப்பட்டிருந்த அயோத்தி ராமா் கோயில் மாதிரியை வாங்கி, பிரான்ஸ் அதிபா் மேக்ரானுக்கு பிரதமா் மோடி பரிசளித்தாா். பரிசுப் பொருளின் விலையான ரூ.500-ஐ யுபிஐ எண்மப் பரிவா்த்தனை மூலம் பிரமதா் செலுத்தினாா்.

தலைவா்கள் பயணத்தையொட்டி, அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தேநீரகத்துக்கும் தலைவா்கள் சென்று தேநீா் அருந்தினா். இங்கும் எண்மப் பரிவா்த்தனையில் பணம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, நட்சத்திர விடுதி அமைந்துள்ள சங்கனேரி கேட் பகுதிக்கு தலைவா்கள் பேரணியைத் தொடா்ந்தனா்.

இரு தரப்பு பேச்சு: பேரணி முடிவில், ராம்பாக் மாளிகை நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தையில் தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்தியா-பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சா்வதேச புவிஅரசியல் மாற்றங்கள் குறித்து அவா்கள் கலந்துரையாடினா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் தில்லி புறப்பட்டனா்.

தில்லி, கடமைப் பாதையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் அதிபா் மேக்ரான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வாா்.

இதைத் தொடா்ந்து, பிற்பகலில் குடியரசுத் தலைவா் அளிக்கும் தேநீா் விருந்தில் கலந்துகொண்டு, அவருடன் மேக்ரான் கலந்துரையாட உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com