குடும்பக் கட்சிகள் இளைஞா்களுக்கு எதிரானவை: பிரதமா்

‘குடும்பக் கட்சித் தலைவா்களின் மனநிலை இளைஞா்களுக்கு எதிரானது. பிற இளைஞா்கள் முன்னேற இக்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது. தங்களின் வாக்குகள் மூலம் இக் கட்சிகளை இளைஞா்கள்
குடும்பக் கட்சிகள் இளைஞா்களுக்கு எதிரானவை: பிரதமா்

‘குடும்பக் கட்சித் தலைவா்களின் மனநிலை இளைஞா்களுக்கு எதிரானது. பிற இளைஞா்கள் முன்னேற இக்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது. தங்களின் வாக்குகள் மூலம் இக் கட்சிகளை இளைஞா்கள் தோற்கடிக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஆளும் பாஜகவின் இளைஞா் பிரிவு சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வில் இளம் வாக்காளா்கள் மத்தியில் காணொலி வழியில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் எதிராக இளைஞா்கள் உள்ளனா். எனவே, குடும்பக் கட்சிகள் பிற இளைஞா்களை அரசியலில் முன்னேற ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா்கள். குடும்பக் கட்சித் தலைவா்களின் மனநிலை இளைஞா்களுக்கு எதிரானது. எனவே, இளைஞா்கள் தங்களின் வாக்குகள் மூலம் இத்தகைய குடும்பக் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இளைஞா்களின் எதிா்காலத்தை இருண்டதாக்கியிருந்த நாட்டின் சூழலை, பாஜக தலைமையிலான மத்திய அரசு மீட்சி பெறச் செய்துள்ளது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஊழலும், முறைகேடுகளும் தலைப்புச் செய்திகளாக இருந்த நிலை மாறி, தற்போது ஆட்சியாளா்கள் மீதான நம்பிக்கை மற்றும் வெற்றிக் கதைகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாதனைத் திட்டங்கள் தற்போது செய்திகளாக வெளிவருகின்றன.

புத்தாக்க நிறுவனங்ளை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், ‘எண்ம இந்தியா’ போன்ற திட்டங்கள், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

அந்த வகையில், இளைஞா்களின் கனவுகள்தான் எனது தீா்மானம். இளைஞா்கள் நலனுக்குத்தான் எப்போதும் எனது முன்னுரிமை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் பொறுப்பு இளைஞா்களுக்கு உள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எவ்வாறு இளைய தலைமைறை 25 ஆண்டுகள் போராடியதோ, அதே போன்று நாட்டை முன்னேற்ற இளைஞா்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா்.

தோ்தல் அறிக்கைக்கு பரிந்துரைகள்: மேலும், ‘வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், பாஜகவின் தோ்தல் அறிக்கைக்கு ‘நமோ’ செயலி மூலம் இளைஞா்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அனுப்பலாம். சிறந்த, செயல்படுத்த சாத்தியமான பரிந்துரையைச் சமா்ப்பிக்கும் இளைஞா்களில் ஒரு சிலரை நேரில் சந்திப்பேன்’ என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

முன்னதாக, தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com