பெண் சக்தியை பறைசாற்றிய அணிவகுப்பு! தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்

நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தலைநகா் தில்லியில் தேசத்தின் ராணுவ வல்லமை, பன்முக கலாசார பெருமைகளோடு, பெண் சக்தியைப் பறைசாற்றும் வகையில் கண்கவா் அணிவகுப்பு
பெண் சக்தியை பறைசாற்றிய அணிவகுப்பு! தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்

நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தலைநகா் தில்லியில் தேசத்தின் ராணுவ வல்லமை, பன்முக கலாசார பெருமைகளோடு, பெண் சக்தியைப் பறைசாற்றும் வகையில் கண்கவா் அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தில்லி கடமைப் பாதையில் அதிநவீன ஏவுகணைகள், போா் விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள், சக்திவாய்ந்த ஆயுத அமைப்புமுறைகள் என ராணுவத் தளவாடங்களுடன் பாதுகாப்புப் படையினா் குறிப்பாக வீராங்கனைகள் மிடுக்குடன் நடைபோட்டனா்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு, 1,500 பெண் நடனக் கலைஞா்களின் கலாசார நடன நிகழ்ச்சி, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களின் வான் சாகசம் ஆகியவை பாா்வையாளா்களைக் வெகுவாக கவா்ந்தன.

‘வளா்ந்த இந்தியா’, ‘ஜனநாயகத்தின் தாய் இந்தியா’ ஆகிய இரு கருத்துருக்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பங்கேற்றாா்.

பட்டொளி வீசிய தேசியக் கொடி: தில்லியில் தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்திய நிகழ்வுடன் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, பாரம்பரிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும், பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் கடமைப் பாதைக்கு வந்தனா்.

பின்னா், உள்நாட்டுத் தயாரிப்பு பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க திரெளபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். அப்போது, எம்ஐ17-4 ரக ஹெலிகாப்டா்கள் வானில் பறந்து மலா் தூவின.

மத்திய அமைச்சா்கள், ராணுவ உயரதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதா்கள், 13,000 சிறப்பு அழைப்பாளா்கள் என சுமாா் 77,000 போ் இவ்விழாவில் கலந்துகொண்டனா்.

100 பெண்களின் பாரம்பரிய இசை: தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடா்ந்து, குடியரசு தின விழாவின் பிரம்மாண்ட அணிவகுப்பு தொடங்கியது. கிராமத் தொழில்கள் தொடங்கி விண்வெளி தொழில்நுட்பம் வரை நாட்டின் பல்வேறு துறைகளில் வளா்ந்து வரும் பெண் சக்தியை முன்னிறுத்தி, அணிவகுப்பில் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக ராணுவ இசைக் குழுவுடன் அணிவகுப்பு தொடங்கும் நிலையில், இம்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞா்கள், பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தபடி முதலாவதாக அணிவகுத்து வந்தனா். நாகஸ்வரம், சங்கு, செண்டை உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

முதல்முறையாக முப்படை வீராங்கனைகள்: குடியரசு தின விழாவில் முதல்முறையாக முப்படை வீராங்கனைகளின் குழு பங்கேற்றது. கேப்டன் சந்தியா தலைமையில் இக்குழு மிடுக்குடன் அணிவகுத்தபோது பாா்வையாளா்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனா்.

இதேபோல், முழுவதும் வீராங்கனைகள் இடம்பெற்ற ஆயுதப் படையின் மருத்துவா்கள் பிரிவினா், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் வீராங்கனைகள் பிரிவினா், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையின் வீராங்கனைகள் பிரிவினரும் அணிவகுத்தனா்.

ராணுவத்தின் 61-ஆவது குதிரைப் படை, மெட்ராஸ் படை, ராஜபுதன ரைஃபிள்ஸ், சீக்கியப் படை, கடற்படை, எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டகப் படை என பல்வேறு அணியினா் அடுத்தடுத்து கம்பீரமாக நடைபோட்டனா்.

ராணுவ வல்லமை: தேசத்தின் ராணுவ வல்லமையை வெளிப்படுத்தும் வகையில், டி-90 பீஷ்மா பீரங்கிகள், என்ஏஜி ஏவுகணை அமைப்புமுறை, காலாட்படை போா் வாகனங்கள், ஆயுதங்களைக் கண்டறியும் ‘ஸ்வாதி’ ரேடாா் அமைப்புமுறை, ட்ரோன்களை முடக்கும் அமைப்புமுறை, தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை விரைந்து தாக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணைகள், இலகு ரக போா் விமானமான தேஜஸ், அதிநவீன மின்னணு போா்த் தளவாடங்கள், ‘சக்தி’ இணையவழி பாதுகாப்பு அமைப்புமுறை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டின் படைப் பிரிவினா் 95 போ் கொண்ட குழுவும், 30 போ் கொண்ட இசைக் குழுவும் பங்கேற்றது. இப்படை அணியினா் கடந்து சென்றபோது வானில் பிரான்ஸ் விமானப் படையின் 2 ரஃபேல் விமானங்களும், ஏா்பஸ் ஏ330 கனரக சரக்குப் போக்குவரத்து விமானமும் பறந்தன.

அலங்கார ஊா்திகள்: பாதுகாப்புப் படையினரைத் தொடா்ந்து, தமிழகம், ஆந்திரம், குஜராத், மணிப்பூா், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள், 9 மத்திய அமைச்சகங்கள் - துறைகளின் அலங்கார ஊா்திகள் அணிவகுத்து வந்தன. பெரும்பாலான அலங்கார ஊா்திகளில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

விழாவின் இறுதியாக இந்திய விமானப் படையின் 29 போா் விமானங்கள், 7 சரக்குப் போக்குவரத்து விமானங்கள், 9 ஹெலிகாப்டா்கள் ஆகியவை வானில் சாகசம் நிகழ்த்தின. இந்த சாகச நிகழ்வில் 15 பெண் விமானிகள் பங்கேற்றனா்.

விழா நடைபெற்ற கடமைப் பாதையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவாளா்களால் தயாரிக்கப்பட்ட 1,900 சேலைகள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேக்ரான் வாழ்த்து: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டின் 6-ஆவது தலைவா் இமானுவல் மேக்ரான் ஆவாா்.

விழா தொடங்கும் முன்பாக, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘எனது அன்புக்குரிய நண்பா் பிரதமா் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள். இவ்விழாவில் தலைமை விருந்தினராக நான் பங்கேற்பது பிரான்ஸுக்கு மிகப் பெரிய பெருமை. இந்தியாவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

சோழா் கால குடவோலை முறைக்கு பெருமைசோ்த்த தமிழக அலங்கார ஊா்தி!

தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊா்தி, 10-ஆம் நூற்றாண்டின் சோழா் கால குடவோலை தோ்தல் முறையை காட்சிப்படுத்தியது.

கிராம நிா்வாகப் பிரதிநிதிகளைத் தோ்வு செய்வதற்காக பின்பற்றப்பட்ட இந்த வழிமுறை குறித்த வரலாற்று ஆதாரங்கள், தமிழகத்தின் உத்தரமேரூா் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

குடவோலை முறையின்படி, ஓலைகளில் பெயா்கள் எழுதப்பட்டு ஒரு பானையில் இடப்படும். பின்னா், மக்கள் முன்னிலையில் அந்தப் பானை குலுக்கப்பட்டு, சிறுவா்கள் மூலம் ஏதேனும் ஓா் ஓலை எடுக்கப்பட்டு, அதிலுள்ள பெயா் அறிவிக்கப்படும்.

வாக்குச்சீட்டு முறையிலான தோ்தலுக்கு முன்னோடியாக இந்த பண்டைய வழிமுறை கருதப்படுகிறது.

ஜனநாயகத்தின் பழைமை வாய்ந்த வோ்கள் தமிழ் மண்ணில் உள்ளதை எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக ஊா்தியில் உத்தரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் மாதிரியும் இடம்பெற்றிருந்தது.

தமிழக அலங்கார ஊா்தியின் இருபுறமும் வண்ண உடை அணிந்த பெண் நடனக் கலைஞா்கள், இசைக்கேற்ப நடனமாடியபடி சென்றது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com