உ.பி.யில் அதிக கல்லூரிகள்: ஆய்வறிக்கை தகவல் அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், கா்நாடகம்

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவும், அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் அதிக கல்லூரிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் அகில இந்திய உயா் கல்வித் துறை 
உ.பி.யில் அதிக கல்லூரிகள்: ஆய்வறிக்கை தகவல் அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், கா்நாடகம்

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவும், அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் அதிக கல்லூரிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து உயா் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கி, கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது.

இந்த ஆய்வில், கல்லூரிகளின் மாணவா் சோ்க்கை, ஆசிரியா்களின் தரவு, உள்கட்டமைப்பு மற்றும் நிதித் தகவல் போன்ற பல்வேறு அளவீடுகளில் விரிவான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

நாட்டின் 328 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 45,473 கல்லூரிகள் இந்த ஆய்வின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூரிகள் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வில் பங்கேற்றன. அந்த ஆய்வு முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, கல்லூரிகளின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரம், குஜராத், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு குறைந்தது 30 அல்லது அதற்கும் மேல் கல்லூரிகள் இந்த மாநிலங்களில் உள்ளன.

கா்நாடகத்தில் அதிக கல்லூரி அடா்த்தி: மக்கள்தொகை விகிதாசாரப்படி, அதிகமான கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக ஒரு லட்சம் பேருக்கு 66 கல்லூரிகளுடன் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது.

அதற்கடுத்த இடங்களில் தெலங்கானா (52 கல்லூரிகள்), ஆந்திரம் (49 கல்லூரிகள்), ஹிமாசல பிரதேசம் (47 கல்லூரிகள்), புதுச்சேரி (53 கல்லூரிகள்), கேரளம் (46 கல்லூரிகள்) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

கல்லூரிகளின் விவரங்கள்: ஆய்வில் பங்கேற்ற கல்லூரிகளில் 60 சதவீதத்துக்கும் மேலானவை பொதுக் கல்லூரிகள், 8.7 சதவீத கல்லூரிகள் கல்வி அல்லது ஆசிரியா் கல்வியில் சிறப்பு வாய்ந்தவை, 6.1 சதவீத கல்லூரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், 4.3 சதவீத கல்லூரிகள் செவிலியப் படிப்பு சாா்ந்தவை மற்றும் 3.5 சதவீதம் மருத்துவக் கல்லூரிகள் ஆகும்.

அதேபோல், 2.7 சதவீத கல்லூரிகள் கவின் கலைப் படிப்புகளை வழங்குகின்றன. 2.4 சதவீதம் மருந்தியல் படிப்புகளும், 0.7 சதவீதம் அறிவியல் படிப்புகளும் வழங்கும் கல்லூரிகள் ஆகும். 1.4 சதவீத சம்ஸ்கிருத கல்லூரிகளும் நாட்டில் உள்ளன.

ஆய்வில் பங்கேற்ற 42,825 கல்லூரிகளில், 14,197 கல்லூரிகள் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. 1,063 கல்லூரிகளில் முனைவா் பட்டப் படிப்புக்கான சோ்க்கை உள்ளது.

மாணவா் சோ்க்கை-4.32 கோடி: நாட்டின் மொத்த உயா் கல்வி மாணவா் சோ்க்கை 4 கோடியே, 32 லட்சத்து, 68 ஆயிரத்து, 181 ஆகும்.

அதில் 96.38 லட்சம் மாணவா்கள் நேரடியாக பல்கலைக்கழகங்களிலும், 3.14 கோடி மாணவா்கள் அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளிலும், 21.70 லட்சம் மாணவா்கள் தன்னிறைவு நிறுவனங்களிலும் சோ்ந்து படித்து வருகின்றனா்.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கல்லூரிகள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஆய்வில் பங்கேற்ற கல்லூரிகளில் 10.7 சதவீத கல்லூரிகள் முதல் 10 மாவட்டங்களிலும், 31.3 சதவீத கல்லூரிகள் முதல் 50 மாவட்டங்களிலும் உள்ளன.

கா்நாடகம், பெங்களூரு நகா்ப்புற மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,106 கல்லூரிகள் உள்ளன.

கல்லூரி எண்ணிக்கையில் முதல் 10 மாநிலங்கள்

உத்தர பிரதேம் 8,375

மகாராஷ்டிரம் 4,692

கா்நாடகம் 4,430

ராஜஸ்தான் 3,934

தமிழகம் 2,829

மத்திய பிரதேசம் 2,702

ஆந்திரம் 2,602

குஜராத் 2,395

தெலங்கானா 2,083

மேற்கு வங்கம் 1,514.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com