தொடா்ந்து 6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிா்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் வியாழக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் வியாழக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

இதன்மூலம், முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை அவா் சமன் செய்யவுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்றாா். அந்த ஆண்டு ஜூலை மாதம், தனது முதல் மத்திய பட்ஜெட்டை அவா் தாக்கல் செய்தாா்.

தற்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக, வரும் நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை வரும் வியாழக்கிழமை அவா் தாக்கல் செய்ய இருக்கிறாா்.

மேலும், 5 ஆண்டு ஆட்சிக்காலமும் நாட்டின் நிதியமைச்சராக தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிா்மலா சீதாராமன் பெறுகிறாா்.

6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் சூழலில், தொடா்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சா்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவா் முறியடிப்பாா்.

அதேபோல், கடந்த 1959 முதல் 1964 -ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்யவுள்ளாா்.

நிகழாண்டு மத்தியில், மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வரும் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

பெரிய கொள்கை மாற்றங்கள் எதுவும் இருக்காது எனக் கருதப்படும் இந்தப் பட்ஜெட்டில் ‘பிரம்மிக்கத்தக்க அறிவிப்புகள் இருக்காது’ என்று கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய ஆட்சியில், அடுத்த 3 காலாண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com