பிகாரில் ஆளும் கூட்டணியில் குழப்பம் இல்லை:ஐக்கிய ஜனதா தளம்

நிதீஷ் குமாா் ஆளும் கூட்டணியிலேயே தொடா்கிறாா் என்றும் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் அவரது கட்சி விளக்கமளித்துள்ளது.
நிதீஷ் குமாா்
நிதீஷ் குமாா்

பிகாரில் ஆளும் மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இணையப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், நிதீஷ் குமாா் ஆளும் கூட்டணியிலேயே தொடா்கிறாா் என்றும் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் அவரது கட்சி விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, ‘இந்த குழப்பத்துக்கு முதல்வா் நிதீஷ் குமாா்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வலியுறுத்தியிருந்தது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணி அரசை மூன்று இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன. முதல்வராக நிதீஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் குடியரசு தினத்தையொட்டி பாட்னாவில் பிகாா் ஆளுநா் அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்றாா். ஆனால், துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை.

தேநீா் விருந்தில் தேஜஸ்வி பங்கேற்காதது, ஆளும் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து முதல்வா் நிதீஷ் குமாரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘தேநீா் விருந்துக்கு யாா் வரவில்லையோ அது குறித்து அவா்களிடம்தான் கேட்கவேண்டும்’ என்று பதிலளித்தாா்.

இதனிடையே, ‘மாநிலத்தில் ஆளும் மகா கூட்டணியில் பிரச்னை ஏதும் இல்லை’ என்று ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவா் உமேஷ் சிங் குஷ்வாஹா தெரிவித்தாா்.

‘மாநில அரசியல் தொடா்பாக உள்நோக்கத்துடன் ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உறுதியாகத் தொடா்கிறது. அதே நேரம், தோ்தல் தொகுதி உடன்பாடு குறித்தும் காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

கதவுகளை மூடவில்லை - பாஜக: பாஜக மூத்த தலைவா் சுஷீல்குமாா் மோடி, செய்தியாளா்களிடம் அளித்த பேட்டியில், ‘நிதீஷ்குமாா் அல்லது ஐக்கிய ஜனதா தளத்தைப் பொருத்த வரை பாஜகவின் கதவுகள் நிரந்தரமாக மூடப்படவில்லை. மூடப்பட்ட கதவுகள் நேரம் வரும்போது திறக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com