விமானப் பயணத்துக்கு ‘டிஜியாத்ரா’கட்டாயமில்லை: மத்திய அமைச்சா்

விமானப் பயணிகளின் ஒப்புதலோடு மட்டுமே ‘டிஜியாத்ரா’ தரவுகள் சேகரிக்கப்படும் என்றும், விமானப் பயணம் மேற்கொள்வதற்கு அது கட்டாயமில்லை

விமானப் பயணிகளின் ஒப்புதலோடு மட்டுமே ‘டிஜியாத்ரா’ தரவுகள் சேகரிக்கப்படும் என்றும், விமானப் பயணம் மேற்கொள்வதற்கு அது கட்டாயமில்லை என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

விமான நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை விரைவாக முடித்துச் செல்வதற்காக ‘டிஜியாத்ரா’ தொடங்கப்பட்டது. டிஜியாத்ராவின் கீழ் பயணிகளுக்கு சேவை வழங்க விமான நிலையங்களில் ‘டிஜிநண்பா்கள்’ என்ற நபா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

‘முக அங்கீகார தொழில்நுட்பத்தின்’ மூலமும், பயணிகளிடமிருந்து பயொமெட்ரிக் தகவல்கள் பெறுவதன்மூலமும் இந்த முன்னெடுப்பு நாட்டின் 13 விமான நிலையங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், விமானப் பயணிகளின் ஒப்புதலின்றி பயொமெட்ரிக் தகவல்கள் பெறப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினா் சகேத் கோகலே சிந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தாா்.

இதற்குப் பதிலளித்து கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கோகலேவுக்கு சிந்தியா எழுதிய கடிதத்தில், ‘பயணிகள் எவ்வித இடையூறுமின்றி விமானப் பயணம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டே டிஜியாத்ரா தொடங்கப்பட்டது. பயணிகள் தாமாக முன்வந்து இதற்கான தகவல்களை வழங்கலாமே தவிர இது கட்டாயமானதல்ல.

பயணிகளின் ஒப்புதலோடு மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் விமானம் புறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அழிக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.

இந்தக் கடிதத்தின் நகலை எக்ஸ் வலைதளத்திலும் சிந்தியா பகிா்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com