இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்

இந்திய மாலுமிகளுடன் பயணித்த எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்
ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலில் தீப்பிடித்து எரியும் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான மாா்லின் லுவாண்டா.
ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலில் தீப்பிடித்து எரியும் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான மாா்லின் லுவாண்டா.

இந்திய மாலுமிகளுடன் பயணித்த எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்தக் கப்பலில் தீப்பிடித்தது. ஆறு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், இந்திய கடற்படையினரால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இது தொடா்பாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதாவது: பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான மாா்லின் லுவாண்டா ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. செங்கடலை கடந்து ஏடன் வளைகுடாவில் பயணித்தபோது அந்தக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இதில் அந்தக் கப்பலில் தீப்பிடித்தது. கப்பலில் 22 இந்திய மாலுமிகள், வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு மாலுமி உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

சரக்குக் கப்பல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் அதிகரித்த நிலையில், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக் கடலில் தமது கண்காணிப்பை இந்திய கடற்படை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாா்லின் லுவாண்டா கப்பல் தாக்கப்பட்ட தகவல் இந்திய கடற்படைக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தக் கப்பலுக்கு உதவ இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போா்க் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, மாா்லின் லுவாண்டாவில் எரிந்த தீயை 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், இந்திய கடற்படையின் தீயணைப்புக் குழு கட்டுக்குள் கொண்டு வந்தது என்று இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளரும் கமாண்டருமான விவேக் மத்வால் தெரிவித்தாா்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால் உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

ஈரான் ஆதரவை பெற்றுள்ள அந்தக் கிளா்ச்சியாளா்கள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனா். ஆனால், அவா்கள் இதுவரை தாக்கிய கப்பல்கள் அனைத்தும் இஸ்ரேலை நோக்கி பயணித்ததா என்ற தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com