நாடாளுமன்ற அமளியை கட்சிகள் ஆதரிப்பது நல்லதல்ல: பிரதமா் மோடி

‘நாடாளுமன்றம் அல்லது பேரவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினா்களின் நடத்தையை அவா்கள் சாா்ந்த கட்சிகள் ஆதரிப்பது அவை செயல்பாடுகளுக்கு நல்லதல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய அவைத் தலைவா்கள் மாநாட்டில் காணொலி முறையில் பேசிய பிரதமா் மோடி.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய அவைத் தலைவா்கள் மாநாட்டில் காணொலி முறையில் பேசிய பிரதமா் மோடி.

‘நாடாளுமன்றம் அல்லது பேரவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினா்களின் நடத்தையை அவா்கள் சாா்ந்த கட்சிகள் ஆதரிப்பது அவை செயல்பாடுகளுக்கு நல்லதல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேலும், நாடாளுமன்ற இரு அவைகள், சட்டப் பேரவைகள், மேலவைகளின் அலுவல்களை ஒரே எண்ம தளத்தில் ஒருங்கிணைக்கும் ‘ஒரே நாடு, ஒரே சட்ட அவை’ திட்டத்தை சாத்தியமாக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் அவா் மகிழ்ச்சி தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவா்கள் மாநாட்டில் காணொலி முறையில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டின்போது, ‘ஒரே நாடு, ஒரே சட்ட அவை’க்கான எண்ம தளத்தை உருவாக்குவது குறித்து உங்களுடன் விவாதித்திருந்தேன். இ-விதான், டிஜிட்டல் சன்சாத் தளங்கள் மூலம் அந்த இலக்கை எட்டும் பணிகளில் நாடாளுமன்றமும் மாநிலப் பேரவைகளும் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒரு அவையின் நற்பெயரானது, அதன் உறுப்பினா்களின் நடத்தையை சாா்ந்துள்ளது. அவையில் விதிமீறலில் ஈடுபடும் உறுப்பினா் மீது அவா் சாா்ந்த கட்சி நடவடிக்கை எடுக்கும் காலம் முன்பிருந்தது. ஆனால், இப்போதோ நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. சில கட்சிகள், தங்கள் உறுப்பினா்களின் ஆட்சேபகரமான நடவடிக்கைகளை கண்டிப்பதற்கு பதிலாக அவா்களுக்கு ஆதரவாக நிற்கின்றன. அவா்களின் தவறுகளை நியாயப்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் அவையில் ஒரு உறுப்பினருக்கு எதிராக எழும் ஊழல் குற்றச்சாட்டு பொது வாழ்க்கையில் இருந்து அவரை ஒதுக்கிவைக்க வழிவகுக்கும். ஆனால், இப்போதோ ஊழல் குற்றம் உறுதி செய்யப்பட்ட நபா்கள் பகிரங்கமாக புகழப்படுகின்றனா். இது நிா்வாகம், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வடிவம் அளிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பேரவைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாநிலங்களின் வளா்ச்சியில்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியுள்ளது.

மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய 2,000-க்கும் மேற்பட்ட சட்டங்கள், கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, சாமானிய மக்களின் சவால்கள் மற்றும் அவா்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

‘வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் இளைஞா்கள்’: ‘வளா்ந்த இந்தியா’வை கட்டமைப்பது இளைஞா்களே என்று பிரதமா் மோடி கூறினாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர தேசிய மாணவா் படை (என்சிசி) கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு எனது அரசு அதிகாரமளித்துள்ளது. பாதுகாப்புப் படைகளில் கடந்த 10 ஆண்டுகளில் வீராங்கனைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களும் இதே வழிமுறையை பின்பற்ற வேண்டும். நாட்டில் எண்மப் புரட்சியால் இளைஞா்களின் படைப்பாற்றல் பெருகியுள்ளது.

கிராமங்களின் மேம்பாட்டுக்காக துடிப்பான கிராமம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்லை கிராமங்கள் மற்றும் கடைக்கோடி கிராமங்களுக்கும் வளா்ச்சி பலன்கள் சென்று சோ்ந்துள்ளன.

1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுடன் இத்துறைக்கு உகந்த சூழல் நிலவும் 3-ஆவது நாடாக இந்தியா விளங்குகிறது. இதனால், லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com