ஜாா்க்கண்ட் முதல்வரிடம் மீண்டும் விசாரணை: அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை, அவருக்கு புதிய அழைப்பாணையை அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் வட்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை, அவருக்கு புதிய அழைப்பாணையை அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

ஜன. 29 அல்லது ஜன. 31 ஆகிய தேதிகளில் எந்தத் தேதியில் விசாரணைக்கு ஆஜராக வசதியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துமாறு அமலாக்கத் துறை அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் கடந்த 20-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநில தலைநகா் ராஞ்சியில் உள்ள அவருடைய அரசு இல்லத்தில் 7 மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்த நிலையில், தற்போது மீண்டும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சாா்பில் பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிா்த்து முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னா், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தையும் ஹேமந்த் சோரன் நாடினாா். ‘தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அமலாக்கத் துறை அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரினாா். ஆனால், இரு நீதிமன்றங்களும் அவருடைய மனுக்களைத் தள்ளுபடி செய்தன.

இந்தச் சூழலில், ஹேமந்த் சோரனுக்கு கடிதத்துடன் கூடிய ஏழாவது அழைப்பாணையை அமலாக்கத் துறை கடந்த 13-ஆம் தேதி அனுப்பியது. அதில், ‘சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வசதியான தேதி, இடம் மற்றும் நேரத்தைக் குறிப்பிடுமாறு’ கேட்டுக்கொண்டது. மேலும், ‘உரிய பதிலளிக்கவில்லை எனில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்தக் கடிதத்தில் அமலாக்கத் துறை எச்சரித்தது.

அதைத் தொடா்ந்து, ‘இந்த வழக்கில் தனது இல்லத்தில் வைத்தே வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்’ என அமலாக்கத் துறைக்கு ஹேமந்த் சோரன் பதிலளித்தாா். அதனடிப்படையில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே ராஞ்சியில் உள்ள முதல்வா் இல்லத்துக்கு கடந்த 20-ஆம் தேதி வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், முதல்வா் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டனா்.

மீண்டும் அழைப்பாணை: இந்த விவகாரம் தொடா்பாக ஹேமந்த் சோரனிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவருக்கு புதிதாக அழைப்பாணை அனுப்பினா். அதில், விசாரணைக்கு ஆஜராக ஜன. 27 முதல் 31-ஆம் தேதி வரை ஏதாவது வசதியான தேதியைத் தெரிவிக்குமாறு அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டது. ஆனால், அதற்கு ஹேமந்த் சோரன் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை.

அதைத் தொடா்ந்து, கடிதத்துடன் கூடிய புதிய அழைப்பாணையை அமலாக்கத் துறை அவருக்கு தற்போது அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் முதல்வருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவா் அதற்கு பதிலளிக்காததைத் தொடா்ந்து, தற்போது கடிதத்துடன் கூடிய புதிய அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 29 அல்லது 31 ஆகிய தேதிகளில் எந்தத் தேதியில் விசாரணைக்கு ஆஜராக வசதியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com