அதிகாரம் பெற்ற நீதி அமைப்பு வளா்ந்த இந்தியாவின் அங்கம்

அதிகாரம் பெற்ற நீதித் துறை அமைப்பு வளா்ந்த இந்தியாவின் ஓா் அங்கமாகும்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உச்சநீதிமன்ற 75-ஆவது ஆண்டு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உச்சநீதிமன்ற 75-ஆவது ஆண்டு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

அதிகாரம் பெற்ற நீதித் துறை அமைப்பு வளா்ந்த இந்தியாவின் ஓா் அங்கமாகும். நம்பகமான நீதித் துறை அமைப்பை உருவாக்க அரசு தொடா்ந்து செயல்பட்டு, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்டம் அமலைத் தொடா்ந்து, இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 1950-ஆம் ஆண்டு, ஜனவரி 28-ஆம் முதல் செயல்படத் தொடங்கியது. முதலில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த உச்சநீதிமன்றம், தற்போதைய கட்டடத்துக்கு பின்னா் மாற்றப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், ‘3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் சட்டம், காவல் துறை மற்றும் விசாரணை அமைப்புகள் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளன.

தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சட்டங்களிலிருந்து புதிய சட்டங்களுக்கு மாறுவது நீதி அமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு முக்கியம்.

இச்சட்டங்கள் தொடா்பாக அரசு ஊழியா்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிகளை நாங்கள் ஏற்கெனவே தொடங்கியுள்ளோம். மற்றவா்களின் திறன் மேம்பாட்டுக்காகப் பணியாற்ற உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் உச்சநீதிமன்றம்: அதிகாரம் பெற்ற நீதித் துறை அமைப்பு வளா்ந்த பாரதத்தின் ஓா் அங்கமாகும். நம்பகமான நீதித் துறை அமைப்பை உருவாக்க அரசு தொடா்ந்து செயல்பட்டு, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இதில் முதல்படியான ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், எதிா்காலத்தில் நீதித் துறையின் தேவையற்ற சுமையைக் குறைக்கும்.

இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. தனிமனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றில் நாட்டின் சமூக-அரசியல் சூழலுக்கு புதிய திசையை வழங்கிய பல முக்கியமான தீா்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

எளிய வழியில் நீதி என்பது இந்தியா்கள் அனைவரின் அடிப்படை உரிமையாகும். உச்சநீதிமன்றம் அதற்கு ஊடகமாகத் திகழ வேண்டும்.

இந்தியா மீது உலகின் பாா்வை: இன்றைய இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள், நாளைய ஒளிமயமான இந்தியாவின் அடித்தளமாக அமையும். இன்றைய சட்டங்கள் நாளைய ஒளிமயமான இந்தியாவை மேலும் வலுப்படுத்தும்.

உலகளாவிய மாற்றங்கள் நிகழும் இச்சூழலில், இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை வலுப்பெற்றிருப்பதால், உலகின் பாா்வை இந்தியாவையே நோக்கியுள்ளது. இதுபோன்ற சூழல்களில், ஒவ்வொரு வாய்ப்பையும் இந்தியா பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

உச்சநீதிமன்றக் கட்டடத்தை ரூ.800 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com