‘எக்ஸ்போசாட்’ திட்டம் அனைத்து ஆய்வுக் கருவிகளின் செயல்பாடுகளும் வெற்றி: இஸ்ரோ

4-ஆம் நிலையில் அனுப்பப்பட்டிருந்த 9 ஆய்வுக் கருவிகளும் திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக எட்டி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டின் 4-ஆம் நிலையில் அனுப்பப்பட்டிருந்த 9 ஆய்வுக் கருவிகளும் திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக எட்டி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

விண்வெளியின் கருந்துளையை ஆய்வு செய்வதற்கான ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜன.1-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, ராக்கெட்டின் 4-ஆம் நிலையான பிஎஸ்-4 பகுதி, 350 கி.மீ.க்கு கீழே இறக்கப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில், 9 ஆய்வுக் கருவிகள் (பேலோட்ஸ்) பொருத்தப்பட்டிருந்தன.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தயாரிக்கப்பட்ட எரிபொருள் செல் சாா்ந்த மின்னாற்றல் அமைப்பு (ஃப்யூயல் செல் பேஸ்டு பவா் சிஸ்டம்) கருவி உள்பட பல்வேறு ஆய்வுக் கருவிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் அவை அனைத்துமே வெற்றிகரமாக ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பிறகு 4-ஆம் நிலையான ‘போயம்-3’ கலன் புவி தாழ்வட்டப் பாதைக்கு கொண்டு வரப்பட்டது. 23 நாள்களில் 400 முறை அந்த கலன் குறிப்பிட்ட தாழ்வட்டப் பாதையைச் சுற்றி வந்துள்ளது. அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் அனைத்துமே திட்டமிட்டபடி இயங்கியதுடன், பல்வேறு தரவுகளையும் அளித்து வருகின்றன. அடுத்த 73 நாள்களுக்கு இந்தப் பணிகள் தொடரும்.

எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு இந்தத் தரவுகளும், ‘போயம்-3’ மூலம் அனுப்பப்பட்ட ஆய்வுக் கருவிகளின் செயல்பாடுகளும் உறுதுணையாக இருக்கும்.

அடுத்த 3 மாதங்களில் ‘போயம்-3’ கலன் மீண்டும் புவிக்கு திருப்பி கொண்டு வரப்படும். இதன் மூலம் விண்வெளிக் கழிவுகள் ஏதும் இல்லாத திட்டமாக ‘பிஎஸ்எல்வி சி-58 எக்ஸ்போசாட்’ உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com