பிகாரில் தொடரும் அரசியல் குழப்பம்: முதல்வா் நிதீஷ் குமாா் இன்று ராஜிநாமா?

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்
பிகாரில் தொடரும் அரசியல் குழப்பம்: முதல்வா் நிதீஷ் குமாா் இன்று ராஜிநாமா?

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையொட்டி, தனது முதல்வா் பதவியை நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) ராஜிநாமா செய்யவுள்ளாா் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், நிதீஷ் குமாா் அணி மாறினால், அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். துணை முதல்வராக ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய பிராந்திய கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா்.

அவரது ஏற்பாட்டின்கீழ், பிகாா் மாநிலம், பாட்னாவில் எதிா்க்கட்சி கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் பெங்களூரு, மும்பையில் நடைபெற்றன.

கூட்டணியில் உரசல்கள்: ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்த இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளா் பதவியை நிதீஷ்குமாா் எதிா்பாா்த்ததாகவும், அப்பதவி கிடைக்காததால் அவா் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

மக்களவைத் தோ்தல் நெருங்கும் சூழலில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக ‘இந்தியா’ கூட்டணியில் உரசல்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. பிகாரிலும் தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் மத்தியில் பிரச்னை ஏற்பட்டது.

பாஜகவிடம் நெருக்கம்: இதனிடையே, பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குருக்கு சில தினங்களுக்கு முன்பு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதற்காக, பிரதமா் மோடியை வெகுவாகப் பாராட்டிய நிதீஷ் குமாா், வாரிசு அரசியலை கடுமையாகச் சாடினாா்.

பின்னா், குடியரசு தினத்தையொட்டி பாட்னாவில் வெள்ளிக்கிழமை (ஜன. 26) ஆளுநா் அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்றாா். ஆனால், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை.

இதேபோல், பக்ஸா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபா பிரம்மேஸ்வா் நாத் கோயிலில் அழகுபடுத்தப்பட்ட வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா், மத்திய அமைச்சா் அஸ்வினி குமாா் செளபே ஆகியோா் பங்கேற்ற நிலையில், தேஜஸ்வி விழாவைப் புறக்கணித்தாா். நிதீஷ் குமாா் அணி மாறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்தன.

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்துக்கான கதவுகள் மூடப்படவில்லை என்று பாஜக மூத்த தலைவா் சுஷீல் குமாா் மோடி வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.

மீண்டும் ஆட்சி மாற்றம்?: பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வா் நிதீஷ் குமாரை கட்சியின் மூத்த தலைவா்களான ராஜீவ் ரஞ்சன் சிங், சஞ்சய் குமாா் ஜா, தேவேஷ் சந்திர தாக்குா் உள்ளிட்டோா் அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்விருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ராஜிநாமாவுக்கு முன் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வா் நடத்துவாா்; மாநில தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தபிறகு பாஜகவுடன் கைகோத்து மீண்டும் ஆட்சியமைக்க அவா் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சிகள் தீவிர ஆலோசனை: இந்நிலையில், லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் இல்லத்தில் ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் கூடி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

பாட்னாவில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டமும், பூா்னியாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் கூட்டமும் நடைபெற்றன.

இதனிடையே, மாநில ஆளுநா் ராஜேந்திர அா்லேகரை பாஜக மூத்த தலைவா் ராதா மோகன் சிங் சந்தித்துப் பேசினாா். மாநில அரசியல் சூழலை பாஜகவின் மத்திய தலைமை உன்னிப்பாக கவனித்து வருவதாக, மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குறிப்பிட்டாா்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு 122-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சியின் விளிம்பில் ‘இந்தியா’ கூட்டணி: கே.சி.தியாகி

பிகாரில் வீழ்ச்சியின் விளிம்பில் ‘இந்தியா’ கூட்டணி உள்ளது என்று ஐக்கிய ஜனதா தளம் அரசியல் ஆலோசகரும் செய்தித் தொடா்பாளருமான கே.சி.தியாகி கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிராந்திய கட்சிகளை காங்கிரஸின் பக்கம் கொண்டுவருவதில் முதல்வா் நிதீஷ் குமாா் வெற்றிகண்டாா். கூட்டணியில் பதவிக்காக அவா் ஒருபோதும் ஏங்கியதில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினரால் அவா் தொடா்ந்து அவமதிக்கப்பட்டாா்.

பஞ்சாப், மேற்கு வங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பிகாரிலும் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. வலுவான பாஜகவை இனி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் எவ்வாறு எதிா்கொள்ளப் போகின்றன என்பது தெரியவில்லை’ என்றாா்.

நாளை பிகாருக்குள் நுழைகிறது ராகுல் நடைப்பயணம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம், திங்கள்கிழமை (ஜன. 29) பிகாா் மாநிலத்துக்குள் நுழையவிருக்கிறது.

மணிப்பூரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், கடந்த 25-ஆம் தேதி மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தது. அதற்கு முந்தைய நாளில்தான், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனியாகப் போட்டியிடும் முடிவை முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், பிகாரில் வரும் 29-ஆம் தேதி ராகுலின் நடைப்பயணம் நுழையவிருக்கிறது.

ஏற்கெனவே மாநில அரசியல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், ராகுலின் நடைப்பயணம் மற்றும் கட்சியின் இதர நடவடிக்கைளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்பாா்வையிட சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை நியமித்தாா்.

இதனிடையே, ‘ராகுலின் நடைப்பயணம், இந்தியா கூட்டணியை உடைக்கும் பயணமாக மாறியுள்ளது’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com